ராம மோகன ராவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் கருத்து
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வந்த மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகள் தற்கொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடி யாது. விவசாயிகள் தைரியமாக இருக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு பக்கபலமாக இருக்கிறது. கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையும் கிராமப்புற ஏழை எளிய மக்கள், விவசாயிகள், சிறு தொழில் செய்வோருக்கு மிக பெரிய ஊக்கம் தரக்கூடிய வகையில் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, எக்காரணம் கொண்டும் விவசாயிகள் மனம் தளரக் கூடாது. மத்திய அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும் வண்ணம் மாநில அரசு துரிதமாக செயல்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடக்கும்
ஜல்லிக்கட்டு நடத்த கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றேன். தற்போதும் கூட நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
பாஜக தமிழ்நாட்டில் முதல் நிலை கட்சி என்ற நிலையை எட்ட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கை அரசு சிறைபிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்து இலங்கையில் நடக்கும் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் பயன்படுத்திய வார்த்தைகள் மிக கடுமையானவை. இதற்காக அவர் மீது கட்டாயமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது கருத்து.
மதுரையில் ரிங் ரோடு
தமிழக முதல்வரை நான் சந்திக்க உள்ளேன். அப்போது, கிழக்கு கடற்கரைச் சாலை, மதுரையில் ரூ. 5 ஆயிரம் கோடியில் ரிங் ரோடு அமைப்பது குறித்து வலியுறுத்துவதுடன் தமிழகத்தில் உள்ள பல சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக ஏற்று நடத்த விருப்பத்தை தெரிவிக்க உள்ளேன் என்றார் அவர்.
