Published : 14 Jun 2016 08:50 AM
Last Updated : 14 Jun 2016 08:50 AM

திரைப்படத் துறைக்கு வருவோருக்கு ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ டி.ஆர்.சுந்தரம் ரோல் மாடல்: எஸ்.பி.முத்துராமன் பெருமிதம்

திரைப்படத் துறைக்கு வருபவர்களுக்கு சேலம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் ஒரு ரோல் மாடல் என திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்தார்.

சேலம் நகரின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, இந்திய தேசிய கலை கலாச்சாரம் பண்பாட்டு பாதுகாப்பு அறக்கட்டளை (INTACH), சேலம் 150 குழு, பெரியார் பல்கலைக் கழகம் ஆகியவை சார்பில் குறும்பட விழா சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் நடந்தது.

திரைப்பட நடிகை ரேகா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பெல்ஜியம், ருமேனியா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த 300 குறும்படங்களில் இருந்து, தேர்வுக் குழுவினரால் 30 படங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் தேர்வான 25 குறும்படங்கள் விழாவில் ஒளிபரப்பப்பட்டன. நிறை வில், 7 பிரிவுகளில் சிறந்த குறும் படங் கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிச ளிப்பு விழாவுக்கு திரைப்பட இயக்கு நர் எஸ்.பி.முத்துராமன் தலைமை வகித்தார்.

விழாவில் சேலத்தின் பெருமைக் குரிய சினிமா தயாரிப்பு நிறுவனமா கவும், திரைத்துறையில் தமிழகத்தின் முக்கிய அடையாளமாக விளங்கிய, ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ குறித்த சிறப்பு ஆவண காட்சி மற்றும் வர்ணனையை திரைத்துறை ஆர்வலர் மணிநாதன் வழங்கினார்.

விழா மேடையில், ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ உரிமையாளர் டி.ஆர்.சுந்தரத்தின் மருமகள் கலைவாணி, சேலம் ‘ரத்னா ஸ்டுடியோ’ நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், திமுக தலைவர் கருணாநிதியுடன் திரைப்படத்துறையில் பணியாற்றிய எழுத்தாளர் வெங்கடசாமி, திரைப்பட தயாரிப்பாளர்கள் கருப்பையா, வைத்தியலிங்கம், இசையமைப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் கவுரவிக்கப் பட்டனர்.

தொடர்ந்து கற்க வேண்டும்

விழாவில் எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது: 150-வது ஆண்டை கொண்டாடும் சேலம் நகரில் திரைப்பட தயாரிப்பை நேர்த்தியாக நடத்திக் காட்டிய டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு புத்தகமான ‘முதலாளி’ திரைப்படத் துறைக்கு வருவோருக்கு மிகச்சிறந்த ரோல் மாடல். இன்றைய நிலையில் தினம் ஒரு புது விஷயம் வருகிறது. எனவே, கற்றுவிட்டோம் என்ற நினைப்புடன் திரைத்துறையினர் இருந்துவிடக் கூடாது. கலையைக் கற்றுக்கொண்ட குருவை மறக்காமல் அவரை மதித்து, தொழிலை தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏற்பாடுகளை ‘தி இந்து’ நாளிதழ், ஏஎன்எஸ் திவ்யம் ஜூவல்லர்ஸ், டிஎம்எஸ் கண் மருத்துவமனை, பாவை எஜூகேஷன் இன்ஸ்டிடி யூஷன்ஸ், த்ரைவ் கார்ஸ், நரசுஸ் காபி, சிவராஜ் ஹாலிடே-இன், சோனா தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை ஒருங்கிணைந்து செய்திருந்தன

பரிசு வென்ற குறும்படங்கள்

சிறந்த பொதுப்பிரிவு குறும்படமாக சென்னை ஷமீர் சுல்தானின், ‘நான் 8’, சிறப்பு பிரிவில் சேலம் சூரிய நாராயணனின், ‘தி அஃபேர்’, மாணவர் பிரிவில் மும்பை எதேல் மிஸ்கொட்டாவின் ‘ஐ லவ் யூ நானி’ ஆகிய படங்கள் முதல் பரிசை பெற்றன.

சிறந்த இயக்குநர்களாக பொதுப்பிரிவில் ‘சோலையாறு’ பட இயக்குநர் சென்னை ராம் சந்திரன், சிறப்புப் பிரிவில் ‘தி அஃபேர்’ பட இயக்குநர் சேலம் சூரிய நாராயணன், ‘இன்டாக்’ பொதுப் பிரிவில் சிறந்த சமூக படமாக சென்னை சந்தீப் லங்காவின், ‘ஊமை’, சிறப்பு பிரிவில் சேலம் பாலாஜி ஜெயராமனின், ‘நூறு’ ஆகியவை பரிசு பெற்றன.

நடுவர்களின் சிறப்பு விருதை பொதுப் பிரிவில் சென்னை குமரனின், ‘வயல்’ படமும், சிறப்புப் பிரிவில் சேலம் சிவசங்கர் நடராஜனின், ‘இப்படிக்கு’, விஷூவல் எஃபெக்ட் பிரிவில் ‘நான் 8’ ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அனைவருக்கும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x