Published : 29 Jun 2015 08:06 AM
Last Updated : 29 Jun 2015 08:06 AM

ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார்

கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் இன்று தொடங்கிவைக்கிறார். 7 ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பணிமனையையும் முதல்வர் திறந்துவைக்கிறார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இரு வழித்தடங்களில் 46 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. வண்ணாரப்பேட்டையில் இருந்து உயர் நீதிமன்றம் வழியாக விமான நிலையம் வரை 24 கி.மீ. தொலைவுக்கு முதல் பாதையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ. தொலைவுக்கு 2-வது பாதையும் அமைக்கப்படுகிறது. இரு வழித் தடங்களிலும் சுரங்கப்பாதை மற்றும் மேல்மட்டப்பாதையாக இத்திட்டம் செயல் படுத்தப்படு கிறது. இதற்கான பணிகள் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி வேகமாக நடந்து வருகின்றன.

இரண்டாவது வழித்தடத்தில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிவடைந்ததால், முதல்கட்டமாக அந்தப் பாதையில் மெட்ரோ ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான சோதனை ஓட்டத்தை 2013-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஓராண்டுக்கும் மேலாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு வட்டம்) மிட்டல் தலைமையிலான குழுவினர், பாதுகாப்பு தொடர்பாக முழுமையான ஆய்வை நடத்தி ஒப்புதல் அளித்தனர்.

இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை ஆலந்தூரில் இருந்து இன்று தொடங்குகிறது. முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இருந்து பகல் 12 மணி அளவில் காணொலி காட்சி மூலம் ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.

கோயம்பேடு, புறநகர் பேருந்து நிலையம் (சிஎம்பிடி), அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களையும் கோயம் பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிமனையையும் முதல்வர் திறந்துவைக்கிறார்.

தொடக்க விழாவையொட்டி மெட்ரோ ரயில் நிலையங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கிவைக்கிறார். இதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. தொடக்க விழா முடிந்து 2 மணி நேரத்தில் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே தொடக்கத்தில் 6 முதல் 9 மெட்ரோ ரயில்களை இயக்கவுள்ளோம். காலை 6 முதல் இரவு 10 வரை ரயில்கள் இயக்கப்படும். பின்னர், மக்களின் தேவைக்கு ஏற்றவாறு ரயில்களின் எண்ணிக்கையையும், நேரத்தையும் நீட்டிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கட்டணம் எவ்வளவு?

மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய 3 விதமாக டிக்கெட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தினசரி பயணம், ஸ்மார்ட் கார்டு மற்றும் குழுக்களாக பயணம் செய்யும் வகையில் டிக்கெட்கள் விற்கப்பட உள்ளன. கட்டண விகிதம் ரூ.10 முதல் ரூ.40 வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஆலந்தூர் - கோயம்பேடு இடையே கட்டணம் எவ்வளவு, மெட்ரோ ரயில் சேவையை சில நாட்களுக்கு இலவசமாக அனுமதிக்கலாமா, என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x