

கூவத்தூர் சொகுசு விடுதியில் இருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக எம்எல்ஏ சந்திரபிரபாவை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன் தாக்கல் செய்துள்ள மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்ற கிளை மறுத்துவிட்டது.
ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த டி.ஆணழகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு:
என் தந்தை தாமரைக்கனி அதிமுகவைச் சேர்ந்தவர். நானும் அதிமுகவில் உள்ளேன். என் தந்தை ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக பலமுறை பதவி வகித்துள்ளார். எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2016-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்று ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் ஜெயலலிதா 5.12.2016-ல் மரணம் அடைந்தார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். இந்த சூழலில் அதிமுக சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்சியின் தற்காலிக பொதுச் செயலராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கடந்த 5.2.2017-ல் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெற்றனர். பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்திருப்பதாக அறிவித்தனர்.
சசிகலாவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெற்றதாக ஓ.பன்னீர்செல்வம் 7.2.2017-ல் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதிமுக எம்எல்ஏக்கள் 129 பேரை சசிகலாவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் கடத்தி கூவத்தூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் சிறை வைத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு எங்கள் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரபிரபாவை தேடிச் சென்றோம். ஆனால் அவர் எம்எல்ஏ அலுவலகத்திலும் இல்லை, அவரது வீட்டிலும் இல்லை. அவரை தேடியபோது வி.கே.சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் மற்ற எம்எல்ஏக்களுடன் சேர்த்து சந்திரபிரபாவைக் கடத்தியதும், அவர் தனியார் சொகுசு விடுதிகளில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
சசிகலாவை முதல்வராக்கும் நோக்கத்தில் அதிமுக எம்எல்ஏக்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைத்துள்ளனர். இதனால் எம்எல்ஏக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை சிறை வைத்துள்ளனர். சந்திரபிரபா உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சசிகலாவை ஆதரிக்க தயாராக இல்லை. எம்எல்ஏக்களை சுதந்திரமாக விட்டு அவர்கள் விருப்பம் போல் முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்.
சந்திரபிரபா ஸ்ரீவில்லிப்புத்தூர் மக்களால் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொகுதி மக்களின் மனதை அறிந்து முதல்வரை தேர்வு செய்வதற்கு எம்எல்ஏக்கு உரிமை வழங்க வேண்டும். இதனால் சசிகலாவின் சட்டவிரோத காவலில் இருந்து சந்திரபிரபாவை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆர்.சுப்பையா, ஜெ.நிஷாபானு அமர்விடம் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் இன்று நேரில் ஆஜராகி கேட்டுக்கொண்டார். அவசரமாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், மனுவை பிப். 15-ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக கூறி ஒத்திவைத்தனர்.