

பல்கலைக்கழகங்களில் ஊழலை தடுக்க உரிய சட்டத் திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக பல்கலைக்கழகச் சட்டங்களில் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தெரிவுக்குழு உள்ளடக்கம் தொடர்பான ஒரு திருத்தம் செய்து, கடந்த 27.05.2017 அன்று தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை, அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் துணைவேந்தரின் கல்வித் தகுதி குறித்து ஆளுநருடன் கலந்தாலோசித்து தமிழக அரசு அரசாணை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறலுக்கும், விருப்பு, வெறுப்பு சார்ந்த நடவடிக்கைக்கும் வழிவகுக்கும் அபாயம் கொண்டதாகும்.
துணைவேந்தர் நியமனத்தில் பல்கலைக்கழகங்களோடு தொடர்புடைய கல்வியாளர்கள் வகித்து வரும் பங்கு புதிய சட்டத் திருத்தத்தில் முற்றாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது கல்வித் தரத்தை உயர்த்தவோ, கல்லூரிகளின் தரத்தை உயர்த்தவோ உதவாது.
மேலும், புதிய சட்டத் திருத்தத்தில் துணைவேந்தர் நியமனத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யவும், எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. எனவே துணைவேந்தர் தெரிவுக்குழு உள்ளடக்கம் தொடர்பான திருத்த சட்டத்தில் உள்ள பாதகமாக பிரிவுகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
கல்வித் தளத்தில் விருப்பு, வெறுப்பற்றும், சார்பு நிலையின்றி நடுநிலையோடும், பணிபுரிந்து வரும் கல்வியாளர்களையும், வல்லுநர்களையும் கலந்தாலோசித்து பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி மற்றும் ஜனநாயக முறைகளை பாதுகாக்கும் வகையில் அவசரச் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.