

தமிழகத்தில் சாலையோர சேமிப்பு கிடங்குகள் உள்ள 10 இடங்களில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து 'அம்மா பெட்ரோல் பங்க்' குகள் நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் ஆர்.காமராஜ் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை உணவுத்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியபோது, ''மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு தேவையான 2 லட்சத்து 92 ஆயிரத்து 994 மெட்ரிக் டன் அரிசியும், 13 ஆயிரத்து 485 டன் கோதுமையும் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்கள் விருப்பத்துக்கேற்ப அரிசிக்கு பதிலாக கோதுமை நகர்ப்புறத்தில் 10 கிலோ, கிராமப்புறத்தில் 5 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது.
நடப்பு பருவத்தில் 655 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிறுவப்பட்டு, 2 லட்சத்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ஊக்கத் தொகையாக ரூ.16 கோடி விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதில் மின்னணு குடும்ப அட்டைகள் தற்போது வரை ஒரு கோடியே 2 லட்சத்து 56 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு, காவிரி டெல்டா மாவட்டங் களில் விவசாயிகளுக்காக ரூ.10 கோடியில் 25 நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.5 கோடியே 50 லட்சத்தில் நெல் உலர்த்தும் களம் அமைக்கப்படும்.
பொதுமக்கள் தேவையை கருத்தில் கொண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து சேலம்- எடப்பாடி, சென்னை- நந்தனம், தஞ்சை- இரும்புத்தலை, திருச்சி-மணப்பாறை, திருவாரூர்-சுந்தரக்கோட்டை, வேலூர்- வாணியம்பாடி, நாகை-கோயில்பத்து, மதுரை-கப்பலூர், விழுப்புரம்-வானூர், கரூர்- கிருஷ்ணராயபுரம் ஆகிய 10 சாலை யோர சொந்த கிடங்கு வளாகங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் நிறுவப் படும்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 26 சேமிப்பு கிடங்குகளில் ரூ.15 லட்சம் மதிப்பில் 239 புற ஊதா ஒளிப்பொறிகள் அமைக்கப்படும். விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன ஊழியர்களுக்கு விளை பொருட்கள் பாதுகாப்பு, சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படும்'' என்று அமைச்சர் காமராஜ் பேசினார்.