

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர், அவரது மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் அருள்ராஜன்(44). இவர் சென்னை கொத்தவால் சாவடியில் போக்குவரத்து போலீஸ்காரராக பணிபுரிந்தார். இவர் தனது மனைவி தேவிநாகம்மை, மகன் சாமுவேல்ராஜ்(8), மகள் ஏஞ்சல்(5) மற்றும் உறவினர் என 8 பேருடன் நேற்று காலை கும்பக்கரை அருவிக்கு சென்றுள்ளார்.
அருவியில் சில தினங்களாக நீர்வரத்து முற்றிலும் இல்லை. மேலும் வனப் பகுதியில் நீர் இல்லாததால் அருவிப் பகுதியில் பள்ளத்தில் கிடக்கும் நீரை அருந்த வனவிலங்குகள் வர வாய்ப்பு உள்ளது என்பதால் அருவிப் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
அங்கு இருந்த வனக்காவலர், தடை குறித்து போலீஸ்காரர் அருள்ராஜனிடம் தெரிவித்து அருவிப் பகுதிக்கு செல்லக் கூடாது என கூறியுள்ளார். இருந்தபோதும் தனது போலீஸ் அடையாள அட்டையைக் காண்பித்து, அருவியை பார்த்துவிட்டு மட்டும் சென்றுவிடுகிறோம் எனக் கூறி அருவிப் பகுதிக்கு சென்றுள்ளார்.
அருவியின் மேல்பகுதியில் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த தண்ணீரை பார்த்தவுடன் மகன் சாமுவேல்ராஜ் குளிக்க ஆசைப்பட்டு தண்ணீரில் இறங்கியுள்ளார். ஆழம் அதிகமாக இருந்ததால் மகன் மூழ்கியதைப் பார்த்த அருள்ராஜன், மகனை மீட்க தண்ணீரில் இறங்கியுள்ளார். பாறைகள் வழுக்கவே இவரும் நீரில் மூழ்கினர். இதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரியகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.