Published : 20 Mar 2017 12:26 PM
Last Updated : 20 Mar 2017 12:26 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி அதிக பலத்துடன் களமிறங்குவது வழக்கமானதாகிவிட்டது. பல நேரங்களில் இடைத்தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருந்திருக்கிறது. ஒவ்வோர் இடைத்தேர்தலின்போதும் பணப்பட்டுவாடா புகார்கள் எழாமல் இருந்ததில்லை. இவற்றையெல்லாம்விட 'திருமங்கலம் ஃபார்முலா' என்று அரசியலில் ஒரு புதிய பதம் தமிழகத்தில்தான் உருவானது. அந்த அளவுக்கு தமிழகத்தில் இடைத்தேர்தல் பிரபலமானது.

வழக்கமாக, ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் ஏதாவது ஒரு கட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கும்போது வெளிப்படையாக முன்வைக்கும் காரணமும் 'இடைத்தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருக்கும்' என்பதுதான்.

ஆனால், இந்த முறை அப்படி உறுதியாக சொல்லிவிட முடியாது என அரசியல் விமர்சகர்கள் பலரும் கணிக்கின்றனர்.

அதிமுக இரு அணிகள் ஆகிவிட்ட நிலையில் சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். இரட்டை இலை சின்னத்துக்கே போட்டி ஏற்பட்டுள்ள சூழலில்தான் இந்த இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தன்னை ஆதரித்து வாக்கு கோர கருணாநிதியின் பிரச்சாரம் இல்லாமல்தான் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4- மாநிலங்களை தனதாக்கிக் கொண்ட வெற்றிக் களிப்பில் கங்கை அமரனை ஏதோவொரு கணக்கின் அடிப்படையில் முன்னிறுத்தியுள்ளது பாஜக.

ஏப்ரல் 1-ல் இருந்து பிரச்சாரம் என அறிவித்துள்ளார் விஜயகாந்த், தேமுதிக சார்பில் மதிவாணனை களமிறக்கியிருக்கிறார்.

தீபாவும் அவரது கணவர் மாதவனும் நாளுக்கொரு காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி அரசியலுக்கு புதிதானவர்களும் அரசியல் ஆழத்தை அலசியவர்களும் களம் காணும் நிலையில் ஆர்.கே.நகர் வேட்பாளர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன? ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் மீதான உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

உங்கள் கேள்விகளை இங்கே பகிரவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x