

கோவையில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கோவை மாநகரில், காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தின் மீது மதவெறிகொண்ட, சமூக விரோதிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மாற்றுக் கருத்துக்களையும், ஜனநாயக பூர்வமான விமர்சனங்களையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற, சங்பரிவாரக் கும்பல்களின் வன்செயல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அதன் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்கும் நடவடிக்கையில் ஒரு பிரிவு மதவெறிக் கும்பல் ஈடுபட்டதையும், மாடுகள் வாங்க ராஜஸ்தான் சென்ற தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை அலுவலர்கள், பசுப்பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதையும் கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனை சகித்து கொள்ள முடியாத, சமூக விரோதக் கும்பல் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தை தாக்கியுள்ளது. பசுக் காவலர்கள், காதலர் கண்காணிப்புக் குழுக்கள், மதக் காவலர்கள் என்ற பெயர்களில் செயல்படும் வன்முறைக் கும்பல்களுக்கு ஆதரவு காட்டும் மோடி அரசின் கொள்கைகள் வன்செயல்கள் அதிகரிக்க காரணமாகும்.
தமிழ்நாடு அரசு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் தப்பியோடிய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கண்டறிந்து, கைது செய்து, சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற வன்செயல்களுக்கு எதிராக இடதுசாரிகள், ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள், சமூக நல்லிணக்கம் காப்போர், அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.