Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை- சிஎம்டிஏ, மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம்உத்தரவு

கொரட்டூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மருத்துவமனை தொடர்பாக சி.எம்.டி.ஏ. மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொரட்டூரில் மருத்துவமனைக் கட்டிடம் கட்டுவதற்காக அனுமதி கோரி ஆர்.ஜெயலட்சுமி என்பவர் 1999-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அனுமதி கிடைக்கும் முன்பே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 2000-ம் ஆண்டு நிறைவுற்றது. எனினும் கட்டிடத்துக்கான திட்ட அனுமதி கோரிய விண்ணப்பத்தை 2002-ம் ஆண்டு சி.எம்.டி.ஏ. நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து மாநில அரசிடம் ஜெயலட்சுமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு விண்ணப்பம் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கட்டிடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி ஜெயலட்சுமி தரப்பினருக்கு சி.எம்.டி.ஏ. நோட்டீஸ் அனுப்பியது. ஏற்கெனவே இருந்த அசல் நிலைக்கு நிலத்தை மாற்ற வேண்டும். செய்யத் தவறினால் கட்டிடத்துக்கு சீல் வைத்து மூட நேரிடும் என அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து ஜெயலட்சுமி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நடத்திய நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

திட்ட அனுமதி பெறாமலேயே மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தில் தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமலேயே பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். ஒரு மருத்துவமனையை நடத்தும் அளவுக்கு அந்தக் கட்டிடத்தில் உறுதித் தன்மை உள்ளதா என்பது பற்றி யாருக்கும் தெரியாது.

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடத்தில் ஒரு மருத்துவமனை செயல்பட்டதை அதிகாரிகள் யாரும் கவனிக்காமல் இருந்தது மிகவும் வியப்பாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு துணைபோயுள்ளனர். இல்லையெனில் மருத்துவமனைக்கு எதிராக அதிகாரிகள் எப்போதோ நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.

சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., தீயணைப்புத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x