

மின் கட்டண உயர்வுக்கு எதிராக தொழிற்துறையினர் மற்றும் நுகர்வோர் அளித்த 700 மனுக்களுக்கு உரிய விளக்கத்துடன் பதில் அளிக்குமாறு தமிழக மின் வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கட்டண உயர்வு தொடர்பாக எந்த விதிகளையும் ஒழுங்குமுறை ஆணையமும் வாரியமும் பின் பற்றவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவுக்கு பதில் அளிக்குமாறு மின் வாரியம், ஒழுங்குமுறை ஆணை யம் மற்றும் அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை டிசம்பர் 16-க்கு ஒத்திவைத்துள்ளது. இதனால், கட்டண உயர்வு தொடர்பான உத்தரவு தாமதமாகவே வெளியாகும் என மின் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிக்கை மீது பொதுமக்கள், நுகர்வோர் மற்றும் தொழிற்துறையினர், தங்களது விமர்சனங்களை கடிதங் களாக ஒழுங்குமுறை ஆணையத் துக்கு அனுப்பியுள்ளனர். சுமார் 700 கடிதங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு அதிகாரப்பூர்வ தகவலுடன் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று மின் வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விளக்கங்களை சம்பந்தப்பட்ட நுகர்வோரின் முகவரிக்கு அனுப்பி வைக்கவும், தேவைப்பட்டால் அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதேநேரத்தில், வரவு - செலவு கணக்கு அறிக்கையை ஆணையத் திடம் மின்வாரியம் அளித்துள்ளது.
இதுகுறித்து மின் வாரிய தலைவர் கே.ஞானதேசிகனிடம் கேட்டபோது, ‘‘மின் வாரியத்தின் ஆண்டு வரவு, செலவு குறித்த விவரங்களை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அளித்துள் ளோம். ஆணையத்தில் இருந்து வாரியத்துக்கு எதிராக எந்தவித மான நோட்டீஸும் வரவில்லை. மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம்தான் முடிவு மேற்கொள்ளும்’’ என்றார்.