Last Updated : 06 Mar, 2014 12:00 AM

 

Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM

தி.நகர் பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி இருக்கும் இலவச கழிப்பறை- சீரமைக்க பயணிகள் கோரிக்கை

தி.நகர் பேருந்து நிலையத்தில் முறையான கழிப்பிட வசதி இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இலவச கழிப்பறைகள் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளதால் அங்கு வரும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரின் இதயப் பகுதியான தி.நகரில் பெருகி வரும் மக்கள் நடமாட்டத்தைக் கணக்கில் கொண்டு அந்த காலத்திலேயே தனியாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் குறைந்தது 25 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். காலை, மாலை என எல்லா நேரத்திலும் மக்கள் அதிகம் கூடும் இங்கு சரியான கழிப்பிட வசதி இல்லை. இதனால் தி.நகர் பகுதிக்கு வேலைக்காகவும், ஷாப்பிங் செய்வதற்காகவும் வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தற்போது இருக்கிற பழைய கழிப்பிடம் பராமரிப்பின்றி உள்ளது. இங்குள்ள பெண்களுக்கான கழிப்பறை முற்றிலுமாக மூடப்

பட்டுவிட்டது. ஆண்கள் பகுதியில் சிறுநீர் கழிப்பிடம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதுவும் சுவர்கள் இடிந்த நிலையில் தண்ணீர் வசதியின்றி உள்ளது. இந்த கழிப்பிடத்தின் சுவர்கள் வலுவிழந்த நிலையில் இருப்பதால் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனேயே உள்ளே செல்ல வேண்டியுள்ளது.

மேலும் இங்கு மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் இந்த கழிப்பிடத்தை மது அருந்தும் கூடமாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இப்பகுதி பாஸ்ட் ஃபுட் கடை ஒன்றில் வேலைசெய்து வரும் மனோகரன் என்பவர் கூறுகையில், “எனக்கு தெரிந்து கடந்த 3 ஆண்டு காலமாக இந்த பேருந்து நிலைய பொதுக் கழிப்பிடம் பராமரிப்பின்றியே கிடக்கிறது. இந்த கழிப்பிடத்தில் சரியான தண்ணீர் வசதியில்லாததாலும், முறையான குழாய்கள் இல்லாததாலும் சாலையோரத்தில் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. இரவு நேரங்களில் இங்கு வருபவர்களிடம் திருநங்கைகள் ஆபாசமாக பேசுகின்றனர்.

கழிப்பிடத்தை பயன்படுத்த வருபவர்களை இங்கு மது குடிப்பவர்கள் மிரட்டுகின்றனர். எனவே பொதுமக்கள் தி.நகர் காவல் நிலையத்துக்கும், பேருந்து நிலையத்துக்கும் இடையில் உள்ள சாலையோரத்தில் சிறுநீர் கழிக்கிறார்கள். இதனால் இப்பகுதியில் கொசுத் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது” என்றார்.

மேனகா என்பவர் கூறுகையில், “தி.நகர் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் பல நாட்களாக பாழடைந்து கிடக்கிறது. பெண்கள் அவசரத்துக்கு எந்த பக்கமும் போக முடியவில்லை. இதனால் தி.நகருக்கு செல்லவே ஒரு நிமிடம் யோசிக்க வேண்டியுள்ளது” என்றார்.

சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், “தி.நகர் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறை குறித்து சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் தகவல் தெரிவிக்கப்படவுள்ளது. விரைவில் இந்த கழிப்பறை சீரமைக்கப்படும். இது மாதிரியான குறைகளை பொதுமக்கள் 1913 என்ற மாநகராட்சி புகார் எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதன் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x