

சவுதி அரேபியாவில் வேலை இழந்துத் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சவுதி அரேபியாவில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட நிதாகத் சட்டத்தால் அங்கு பணியாற்றி வந்த இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிதாகத் சட்டத்தை செயல் படுத்துவதற்கான காலக் கெடுவை சவுதி அரசு 7 மாதங்களுக்கு நீட்டித்திருந்தது. புதியக் காலக்கெடு கடந்த 3 ஆம் தேதியுடன் முடிந்து விட்ட நிலையில், இதுவரை பணி உரிமம் புதுப்பிக்காமலும், புதிய வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளாமலும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக சவுதி அரேபிய அரசு தொடங்கியிருக்கிறது.
நிதாகத் சட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த அக்டோபர் இறுதிவரை 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சவுதி அரேபியாவில் தங்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு லட்சத்து 34,281 பேர் தாயகம் திரும்பியிருக்கின்றனர்.
இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தவிர மீதமுள்ள 12 லட்சம் இந்தியர்களின் வேலைவாய்ப்பு நிலைமை என்ன? என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உட்பட பல லட்சம் இந்தியர்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் அங்கு வேலை செய்ய முடியாமலும், தாயகம் திரும்ப முடியாமலும் தாங்கள் தங்கியுள்ள வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
கேரள அரசு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், வெளிநாடுவாழ் மலையாளிகள் விவகாரத்துறை மூலம் சவுதி அரேபியத் தலைநகர் ரியாத், ஜெட்டா, தமாம் ஆகிய இடங்களுக்கு ஆலோசனைக் குழுக்களை அனுப்பி உரிய ஆவணங்கள் இல்லாமல் தவிக்கும் மலையாளிகளை மீட்டு வர நடவடிக்கை எடுத்திருக்கிறது.
ஆனால், சவுதியில் தவிக்கும் தமிழர்களை மீட்டுவர அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சவுதியில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடையக்கூடும் என்பதால் அங்கு தவிக்கும் தமிழர்களை மீட்டுவரத் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
சவுதியில் இருந்து திரும்பியோரின் மறுவாழ்வுக்காக கடன் மற்றும் நிதி உதவித் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.