

சென்னையில் மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகளை பல்வேறு இடங்களில் மாநகராட்சி செய்து வருகிறது. ஆனால், அவசர அவசரமாக போடப்படுவதால் சாலைகள் தரமானதாக இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
கடந்த நவம்பர் 11-ம் தேதி வரை சென்னையில் 1,013 சாலைகளில் 4,245 பள்ளங்கள் கண்டறியப்பட்டு சீர்செய்யப்பட்டுள்ளன என்றும், நவம்பர் 24-ம் தேதி வரை 239 சாலைகளில் 2,210 பள்ளங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் 2,075 பள்ளங்கள் சீரமைக்கப்பட் டுள்ளன என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
சீரமைத்த சாலைகள் மீண்டும் பழுது
தி.நகர் வடக்கு போக் சாலையில், சேதமடைந்த இடங்களில் சாலை ஒட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், சீரமைத்த சில நாட்களிலேயே சாலை மீண்டும் பழுதடைந்து விடுவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் கூறும்போது, ‘‘தார் அதிகமாக கலக்காததால், ஜல்லி வெளியில் தெரிகிறது. அதனால், நடந்து செல்லவும், வாகனங்களை ஓட்டவும் சிரமமாக இருக்கிறது. சீரமைப்பு பணிகளுக்கு பிறகு, சில இடங்களில் சாலை மிகவும் மேடாக இருக்கிறது. மீண்டும் மழை பெய்தால், இந்த சாலைகளின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை’’ என்றார்.
சாக்கடையை தேடிய ஊழியர்
சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில், சாலை சீரமைப்புப் பணி மேற்கொண்டபோது, அங்கிருந்த கழிவுநீர் சாக்கடை துவாரத்தை மறைத்து, அதன் மீதே சாலை போடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நேற்று கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய வந்த குடிநீர் வாரிய ஊழியர், சாக்கடை துவாரத்தை காணாமல் தேடியிருக்கிறார்.
அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களின் உதவியுடன், துவாரம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, புதிதாக போடப்பட்ட சாலையை மீண்டும் தோண்டியெடுத்துள்ளனர். இதுபற்றி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறும்போது, ‘‘கழிவுநீர் சாக்கடை இருப்பது தெரிந்தும், சாலையை அதன் மீது ஏன் போட வேண்டும்? மருத்துவமனை இருக்கும் இந்தப் பகுதியில் தரமான சாலை இல்லாததால், அடிக்கடி பழுது ஏற்படுகிறது’’ என்றார்.
வாகன ஓட்டிகள் அவதி
கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் கடந்த ஒருவாரமாக சாலை சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. சாலையில் சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. “இரவில் வாகனம் ஓட்டும்போது, எங்கு ஜல்லி இருக்கிறது என்று தெரியாமல், 2 முறை தவறி விழுந்துவிட்டேன். ஒருவாரமாக சாலையில் தூசியும் புகையும் அதிகரித்துள்ளது’’ என்றார் இந்த சாலையை தினமும் பயன்படுத்தும் மகேஸ்வரி.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘பழுதடைந்த இடங்களை உடனடி யாகவும், தற்காலிகமாகவும் சரி செய்யும் பணி மட்டுமே நடக்கிறது. மழைக்காலம் முடிந்த பிறகு, புதிதாக சாலை போடப்படும். காந்தி மண்டபம் சாலையில் புதன்கிழமை (இன்று) சீரமைப்புப் பணிகள் முடிந்து விடும். இரவில் மட்டும் பணிகளை மேற்கொள்வதால்தான் ஒரு வாரம் ஆனது’’ என்றார்.