Published : 14 Mar 2017 04:46 PM
Last Updated : 14 Mar 2017 04:46 PM

ஊழலைத் தடுக்க பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிய நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது: ராமதாஸ்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ஓய்வு பெற இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் புதிய நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் உயர்கல்வியைக் கற்றுத்தர வேண்டிய பல்கலைக்கழகங்கள், இப்போது ஊழலைக் கற்றுத் தருபவையாக மாறியிருக்கின்றன. கல்வி நிலையங்களில் ஊழலை ஒழிக்க வேண்டிய ஆட்சியாளர்கள், தங்களுக்கு கிடைக்கும் பங்குக்காக ஊழலை ஊக்குவித்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் வெ.பா. முத்துக்குமார் கடந்த 13.06.2014 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை விட அதிக தகுதியும், அனுபவமும் கொண்ட ஏராளமான பேராசிரியர்கள் இப்பதவிக்கு போட்டியிட்ட நிலையில், அவர்களை ஒதுக்கிவிட்டு தகுதி குறைந்தவரான முத்துக்குமார் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்தது.

அதன் பின்னர் 33 மாதங்களாக துணைவேந்தராக பணியாற்றி வரும் இவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், காலியாக உள்ள ஆசிரியரல்லாத 60 பணியிடங்களை நிரப்பி ஊழல் செய்ய முயல்வதாக முத்துக்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், இளநிலை உதவியாளர், ஓட்டுனர், தோட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட 60 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டு விண்ணப்பித்தோருக்கு இம்மாதம் 18, 20 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தி பணி நியமனம் செய்ய துணைவேந்தர் திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

உதவியாளர் பணிக்கு ரூ.6 லட்சம், இளநிலை உதவியாளர் பணிக்கு ரூ.4 லட்சம், பிற பணிகளுக்கு ரூ.3 லட்சம் வீதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் நியமன ஆணைகள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்பட இருப்பதாகவும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஸ்காலர்ஸ் ஃபோரம் என்ற அமைப்பு ஆளுநரிடம் முறையிட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் புறந்தள்ளிவிட முடியாதவையாகும்.

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கும் முத்துக்குமார் வரும் ஜூன் 12-ம் தேதி ஓய்வுபெறவுள்ளார். வழக்கமாக துணைவேந்தர் பதவியில் இருப்பவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பாக மூன்று மாதங்களுக்கு பல்கலைக்கழகம் சார்ந்த கொள்கை முடிவு எடுப்பதிலிருந்தும், பணி நியமனம் செய்வதிலிருந்தும் விலகியிருக்க வேண்டும் என்பது மரபாகும்.

துணைவேந்தர் முத்துக்குமார் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவசர, அவசரமாக பணி நியமனங்களை மேற்கொள்வதன் பின்னணியில் ஊழல் செய்து பணம் ஈட்ட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருக்க முடியாது என்பது பல்கலைக்கழக செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு புரியும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் இத்தகைய ஊழல்கள் நடைபெறுகின்றன என்று கூறமுடியாது. தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஊழல்கள் மட்டுமே பொதுவான அம்சமாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த முனைவர் ராஜாராமின் பதவிக்காலம் கடந்த மே 26-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட பிறகு பணி நியமனங்களை செய்ய முடியாது என்பதால், கடந்த ஆண்டு ஜனவரி இறுதியில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் 112 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டன. இதில் மட்டும் ரூ. 40 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதன்பின் கடந்த நவம்பர் மாதம் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என 64 பணியிடங்களை நிரப்புவதிலும், நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலையில் 8 பேராசிரியர்கள், 17 இணைப் பேராசிரியர்கள், 29 உதவிப் பேராசிரியர்கள் என 54 காலியிடங்களை நிரப்புவதிலும் சேர்த்து மொத்தம் ரூ. 50 கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்தன.

இந்த ஊழல்களை அப்போதே நான் அம்பலப்படுத்தியதன் அடிப்படையில், அதுகுறித்து விசாரணை நடத்த ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவ் ஆணையிட்ட போதிலும், ஊழல் புகார்கள் தொடர்பாக இன்று வரை யார் மீதும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பணி நியமன ஊழல்களை தனித்துப் பார்க்க முடியாது. முந்தைய காலங்களில் தலைசிறந்த கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்ட போது தகுதியானவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், ஜெயலலிதா ஆட்சியிலும், அவரது வழியில் நடைபெறும் பினாமி ஆட்சியிலும் கோடிகளை கொட்டுபவர்கள் தான் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்பதால், அவர்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுப்பதற்காக இதுபோன்ற ஊழல்களில் ஈடுபடுகின்றனர்.

மற்றொருபுறம் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம் ஆகிய 5 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிர்வகிக்கும் பொறுப்புக்குழுவினர் தங்களின் விருப்பம் போன்று ஊழல்களை செய்து பல்கலைக்கழகங்களை திவாலாக்கி வருகின்றனர்.

இவற்றுக்கு முடிவு கட்டும் வகையில் காலியாக உள்ள 5 பல்கலைக்கழகங்களிலும் தகுதியான கல்வியாளர்களை கையூட்டு வாங்காமல் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ஓய்வு பெற இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் புதிய நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்று அவரை ஆளுநர் எச்சரிக்க வேண்டும். மற்ற பல்கலைக்கழகங்களில் நடந்த நியமன ஊழல்கள் குறித்தும் விசாரணைக்கு ஆணையிட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x