Published : 28 Sep 2013 09:23 AM
Last Updated : 28 Sep 2013 09:23 AM

கோடிக் கணக்கில் லாபம்... கொத்தடிமைகளாய் காவலாளிகள்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை எல்லீஸ் சாலையில் இருக்கும் தனியார் ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த போதை இளைஞர்கள் செய்த ரகளையும் ஏ.டி.எம். மையத்தின் காவலாளி மீதான கொலை வெறித் தாக்குதல் முயற்சியும் காவலாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும், தனியார் வங்கிகள் தொடங்கி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் ஏ.டி.எம். மையங்கள் மூலம் கொழுத்த லாபம் சம்பாதித்தும் அம்மையத்தின் ஊழியர்களுக்குப் பாதுகாப்பும் மையத்துக்கு பராமரிப்பும் வழங்காத அவலமும் அம்பலமாகி இருக்கிறது.

கடந்த 21-ம் தேதி நள்ளிரவு எல்லீஸ் சாலையில் இருக்கும் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு இரு போதை இளைஞர்கள் சென்றனர். ஒருவர் மையத்தின் வாசலில் நின்றுகொள்ள ஒருவர் உள்ளே சென்று அங்கிருந்த காவலாளியை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். மேலும் அவரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை பிடுங்கி தண்ணீரை கொப்பளித்து ஏ.டி.எம். எந்திரம் மீது பலமுறை காறித் துப்பினார். பின்னர் அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரங்களை அடித்து உடைத்தார். அந்த இளைஞர் வெளியேறியதும், அவருடன் வந்த இன்னொருவர் உள்ளே நுழைந்து காவலாளியைத் தாக்க முற்பட்டார். பின் வெளியேறி, பெரிய பாறாங்கல்லைத் தூக்கி மையத்தின் கண்ணாடிக் கதவு வழியாக காவலாளியை குறி வைத்து வீச அது கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக காவலாளி உயிர்த் தப்பினார்.

மேற்கண்ட சம்பவங்கள் எல்லாம் மையத்தில் இருக்கும் காமிராவில் பதிவாகியுள்ளன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை சில மணி நேரங்களிலேயே போலீஸார் கைது செய்தனர்.

இப்படி ஒரு சம்பவம் மட்டும் அல்ல... சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐஸ் ஹவுஸ் அருகில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு சங்கிலியால் கட்டி லாரியில் இழுத்துச்சென்று கொள்ளையடிக்க முயற்சித்தனர். ஏப்ரல் மாதம் வாடிப்பட்டியில் ஏ.டி.எம். மையக் காவலாளியை வெட்டிக் கொலை செய்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் இரு மாதங்களில் மட்டும் சென்னையில் சுமார் 26 ஏ.டி.எம். கொள்ளை முயற்சிகள் நடந்ததாக தெரிவிக்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

கொள்ளையர்கள் கவனத்துக்கு...

கடந்த ஆகஸ்ட் மாதம் அரக்கோணம் அருகே பெருங்களத்தூரில் தனியார் ஏ.டி.எம். மையத்தில் ஆறு லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. எந்திரத்தை உடைத்து அல்ல; பணத்தை எந்திரத்துக்குள் வைக்கும் ஊழியர்களே பாஸ்வேர்டை பயன்படுத்தி கொள்ளை அடித்தார்கள். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், தமிழகத்தில் இதுவரை ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடித்ததாக சரித்திரம் இல்லை. அது சுலபமானதும் அல்ல.

ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதியில் ஐந்து அல்லது ஆறு அறைகளுக்குள் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்த அறைகள் அலாய் ஸ்டீலால் ஆன பெட்டகத்தால் சூழப்பட்டிருக்கும். பெட்டகத்தை லாக் செய்தால் நான்கு பக்கமும் தலா இரு லாக் வீதம் மொத்தம் எட்டு லாக் செய்யப்படும். இந்த லாக்கை எவ்வித கூரிய ஆயுதத்தைக்கொண்டும் அறுக்க முடியாது. மேலும் இந்தப் பெட்டகத்தை எந்திரத்தை வெல்டிங் ராடு மூலம் உருக்க முற்பட்டால் அது மேன்மேலும் உறுதி அடையுமே தவிர உருகாது. சில தனியார் வங்கிகள் இந்த பெட்டகத்தை 24 மணி நேரம் உயர் வெப்பத்தில் வைத்து சோதித்தப் பின்பே வாங்குகின்றன. எனவே, யாரும் வீண் முயற்சியில் ஈடுபட்டு சிறைக்குள் கம்பி எண்ண வேண்டாம்.

ஏ.டி.எம். மையங்கள் - பணம் காய்க்கும் மரங்கள்!

தமிழகத்தில் 2000-ம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஏ.டி.எம். எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது வாடிக்கையாளர்களை ஏ.டி.எம். மையங்களை நோக்கித் தள்ள வங்கிகள் படாதபாடு பட்டன. ஏனெனில் வங்கிகளுக்கு ஏ.டி.எம். மையங்கள் பல வகைகளில் லாபகரமானவை.

ஒருவர் வங்கிக்கு பணம் எடுக்கவோ செலுத்தவோ வந்தால் அவருக்கான இடம், இருக்கை, மின்சாரம், குடிநீர், ஊழியர் சம்பளம், காசோலை, சலான், பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி செலவுகள் ரூ.40 முதல் 55 வரை ஆகிறது. ஆனால், ஏ.டி.எம்-ல் அதே நடவடிக்கைக்கு ஆகும் செலவு ரூ.12 முதல் 20 வரை மட்டுமே. அதுவும் ஒரு ஏ.டி.எம். மையத்தை நாள் ஒன்றுக்கு சராசரியாக 500 வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினால், அந்த செலவும் ஈடுகட்டப்படும். சேமிப்பு, செலவு தவிர்ப்பு இவற்றைத் தாண்டி இன்றைய ஏ.டி.எம். மையங்கள் வங்கிகளுக்கு கொழுத்த லாபத்தை ஈட்டித்தரும் வணிக மையங்களாகிவிட்டன.

இன்றைக்கு பணம் எடுப்பது, செலுத்துவது மட்டும் இல்லாமல் ஏ.டி.எம். எந்திரத்திலேயே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்; மொபைல் போனுக்கு டாப் அப் செய்யலாம். மின்வாரியக் கட்டணம் செலுத்தலாம். கேதார்நாத், பத்ரிநாத், திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு தரிசன டிக்கெட் முன்பதிவு மற்றும் நன்கொடை செலுத்தலாம். முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்தலாம். இவை இருதரப்பிலும் கட்டணம் வசூலிக்கின்றன வங்கிகள்.

இப்போது எந்த வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டெபிட் அட்டை தருவது இல்லை. ரூ.50 முதல் 250 வரை கட்டணம் வசூலிக்கின்றன. தவிர, ஏ.டி.எம். எந்திரத்துடனான குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமான நடவடிக்கைகளுக்கு கட்டணம், மாதாந்திர சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன. வாடிக்கையாளர்கள் டெபிட் அட்டை மூலம் வணிக நடவடிக்கை மேற்கொண்டால் அதற்கும் 2 முதல் 4% வரை கட்டணம் வசூலிக்கின்றன. தவிர, விசா, மேஸ்ட்ரோ போன்ற இடைத்தரகு நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வருமானத்தை பெறுகின்றன. இன்று அனைத்து வங்கிகளும் ஒவ்வொரு ஆண்டும் ஏ.டி.எம். மையங்கள் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு இலக்கு நிர்ணயித்து தீயாய் வேலை செய்கின்றன.

பராமரிப்பு - படுமோசம்!

இப்படி கொள்ளை லாபம் பார்த்தாலும் வங்கிகள் ஏ.டி.எம். மையங்களுக்காக செலவிடுவது சொற்பத் தொகை மட்டுமே. குறிப்பாக பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மையங்களை நேரடியாக பராமரிப்பது இல்லை. தனியார் நிறுவனங்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுகின்றன. தென் மாநிலங்களில் இருக்கும் பெரும்பாலான வங்கிகளுக்கான பராமரிப்பு தனியார் ஏஜென்ஸிகளை அரசியல் பின்னணி கொண்ட நபர்களே நடத்துகின்றனர். அனைத்து வங்கிகளும் ஏ.டி.எம். மையத்தின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது. தமிழகத்தில் இம்மையங்கள் துவக்கப்பட்டபோது டெபிட் அட்டையை மையத்தின் வாயில் கதவில் சொருகினால் மட்டுமே கதவு திறக்கும். கதவில் அட்டையை சொருகும்போதே உள்ளே இருக்கும் காமிரா கண்விழித்துக்கொள்ளும். காமிரா 90 நாட்கள் வரை இடைவிடாமல் பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ளும். ஆனால், இன்றைக்கு 90 % மையங்களில் வாயில் கதவு லாக் சிஸ்டம் செயல் இழந்துவிட்டன.

பல மையங்களில் அப்படி ஒரு சிஸ்டமே கிடையாது. இம்மையங்களின் துப்புரவுப் பணி, பேப்பர் உள்ளிட்ட ஸ்டேஷனரி வைப்பது, மின்சார செலவு, காவலாளி சம்பளம் என நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.600 முதல் 800 வரை தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் அளிக்கின்றன. இதில் மூன்று ஷிப்ட்டுகளுக்கு ரூ. 360 வரை (மூன்று பேருக்கு) சம்பளம்; சுமார் ரூ.100 இதர பராமரிப்பு செலவு போக மீதம் தனியார் நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன.

கொத்தடிமைகளாய் காவலாளிகள்!

தமிழகத்தில் எந்த ஒரு மையத்திலும் காவலாளிக்கு சாப்பிடும், உடை மாற்றும் அறையோ அல்லது இயற்கை உபாதைக்கான கழிப்பறையோ கிடையாது. இது ஐ.நா-வின் பணியிட ஊழியர்களுக்கான மனித உரிமை சாசனத்துக்கு எதிரானது. தொடக்கத்தில் ஓய்வுபெற்ற ராணுவம் மற்றும் காவல் துறை ஊழியர்களை மட்டுமே மையங்களின் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்க வேண்டும். அவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாத்தல் மற்றும் தற்காப்பு கருவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு வங்கிகள் முடிவு செய்தன. தவிர, சில வசதிகளையும் செய்துதர முடிவு செய்யப்பட்டது. ஆனால், பொருளாதார செலவு கருதி எந்த வங்கியும் மேற்கண்டவற்றை நடைமுறைப்படுத்தவில்லை.

இன்று பெரும்பாலான மையங்களில் 50 தொடங்கி 80 வயது வரையிலான ஆட்களே காவலுக்கு இருக்கிறார்கள். இவர்களுக்காகப் பணியிட பாதுகாப்பு, சம்பள நிர்ணயம் உள்பட எவ்வித விதிமுறைகளையும் இயற்ற ஒரு வங்கியும் இதுவரை யோசிக்கக்கூட இல்லை.

எல்லாவற்றையும் விட கொடுமை, சில தனியார் நிறுவனங்கள் காசுக்கு ஆசைப்பட்டு ரோட்டில் அனாதையாக விடப்பட்ட முதியவர்களையும் பிச்சைக்காரர்களையும்கூட அள்ளிக்கொண்டு வந்து அடிமாட்டு கூலிக்கு மையங்களில் பணிக்கு அமர்த்தி இருக்கின்றன.

இனியாவது, அனைத்து வங்கிகளும் லாப நோக்கத்தை கருதாமல் பாதுகாப்பு நோக்கில் ஏ.டி.எம். மையங்கள் மற்றும் அதன் காவலாளிகளுக்கான பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும். இதற்கான முதல் அடியை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் எடுத்து வைத்தால் அடுத்து தனியார் வங்கிகளும் தானாக வந்துவிடுவார்கள். ஆனால், என்ன... வழக்கம்போல அதற்கும் வாடிக்கையாளர்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள்!

எல்லிஸ் சாலையில் தாக்குதலுக்கு உள்ளான காவலாளி லட்சுமணுக்கு வயது 76. ‘‘ஊருப் பக்கம் விவசாயக் கூலியா இருந்தேன். ரெண்டு பொம்பளைப் புள்ளைங்களை கட்டிக்கொடுத்ததுலயே என் ஆயுசு போயிடுச்சு. பொண்டாட்டியும் போய் சேர்ந்துட்டா. நடுத்தெருவுக்கு வந்து கஞ்சிக்கு வழி இல்லாம இங்கே கிடக்கிறேன். தினமும் ஒன்றரை ஷிஃப்ட் பாக்குறேன். மாசம் ரூ.4500 தர்றாங்க. அந்த பசங்க அடிச்சதுல தலையிலயும் ரெண்டு முட்டிலயும் காயம். ஆஸ்பத்திரி செலவுக்குக்கூட யாரும் காசு தரலை. ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில இருந்துட்டு இன்னைக்குத்தான் வேலைக்கு வந்தேன். ரெண்டு நாள் சம்பளம் போனதுதான் மிச்சம்.” என்றார் வேதனையுடன்!

கைக்கொடுக்கும் தொழில்நுட்பம்

ஏ.டி.எம். மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியாவின் ஏ.டி.எம். பிரிவின் உதவிப் பொது மேலாளர் கோபுவிடம் பேசினோம். ‘‘தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு, கண்காணிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. யாராவது ஏ.டி.எம். எந்திரத்தை நகர்த்தினாலே அடித்தாலோ பின்புறமாக தொட்டாலோ மறு நொடியே கண்காணிப்புக் குழுவினர், சம்பந்தப்பட்ட வங்கிப் பொறுப்பாளர், அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுவிடும். தவிர, வழக்கமான காமிராவைத் தவிர ஆங்காங்கே இருக்கும் ரகசிய சிறப்பு காமிராக்கள் பல்வேறு கோணங்களில் கொள்ளையரை படம் பிடிக்கத் தொடங்கும். இவை தவிர, அந்த மையத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளிலும் அலாரம் ஒலிக்கத் தொடங்கும். மேற்கண்ட தொழில்நுட்பத்தை செயல்படுத்த கூடுதல் செலவு, 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் தேவை. எதிர்காலத்தில் மேற்கண்ட வசதிகள் கொண்டுவரப்படும்.” என்றார்.

மூவாயிரம் வாடகையில் முழு தொழில்நுட்பம்!

ஒருங்கிணைந்த பாதுகாப்பு, கண்காணிப்பு தொழில்நுட்பத்தை தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் செயல்படுத்தி வருகிறது தனியார் நிறுவனமான குவாலிட்ரானிக்ஸ். மும்பையில் இருக்கும் அதன் உற்பத்திப் பிரிவு மேலாளர் வெங்கட சுப்பிரமணியன், ‘‘பெரும்பாலான வங்கிகளுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஆனாலும், எஸ்.பி.ஐ., கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் இண்டியா, ஆந்திரா வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் தங்களது கிளையுடன் கூடிய மையங்களில் இந்த தொழில்நுட்பத்தை எங்கள் நிறுவனம் மூலம் பொருத்தியிருக்கின்றன. இந்த தொழில்நுட்பத்தை ஒரு மையத்தில் பொருத்த ரூ.50 முதல் 60 ஆயிரம் வரை செலவாகும். மாதாந்திர பராமரிப்பு செலவு 1000 ரூபாய் வரை வரும். தவிர, 3000 ரூபாய்க்கு மாத வாடகையிலும் இந்த தொழில்நுட்பத்தை பொருத்தித் தருகிறோம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x