

முக்கியமான பொது பிரச்சினைகளில்கூட தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால்தான் மாநிலத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் வஞ்சிக்கிறது என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
ஆந்திரம், கர்நாடகம் உள்பட எல்லா மாநிலங்களிலும் பொதுப் பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துகின்றன. இதனால், அவர்களது கோரிக்கைகள், மத்திய அரசை விரைவில் எட்டுகிறது. அதற்கு பலனும் கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை காவிரி, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் என எந்தப் பிரச்சினை என்றாலும் எல்லா கட்சிகளும் ஒன்றுபோல அறிக்கை விடுகின்றன. ஆனால், போராட்டம் என்று வந்துவிட்டால் நவக்கிரகங்களைப் போல ஆளுக்கொரு திசையில் நிற்கின்றன.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகின்றன. தமிழக காங்கிரஸ் கட்சிகூட இதே கருத்தைத் தெரிவித்து வந்தது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவருக்கு பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொண்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து ஒரு துரும்புகூட இலங்கை மாநாட்டுக்கு போகக் கூடாது என கட்சிகள் கூறிவரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்வது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததுதான் காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களும் வலுப்பெறவில்லை. காரணம், ஒரே கருத்து கொண்டுள்ள கட்சிகள், அதற்கான போராட்டத்தை தனித்தனியாக நடத்துவதுதான். எல்லா கட்சிகளும் ஆளுக்கொரு திசையில் தனித்தனியே போராட்டம் நடத்துவது, தமிழர்கள் நலன் குறித்த விவகாரத்தில்கூட இவர்களிடையே ஒற்றுமை இல்லாததையேக் காட்டுகிறது.
பொது நலன் என்பதைக் காட்டிலும் அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்தான் கட்சிகளுக்கு பிரதானமாக தெரிகிறது. தேர்தல் கூட்டணியை மனதில் வைத்தே, இலங்கை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் கண்துடைப்பு நாடகம் ஆடுவதாக நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் இலங்கைத் தமிழர் விவகாரம்தான் முக்கிய விஷயமாக தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டன. கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு இலங்கை பிரச்சினை முக்கிய காரணமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது.
அதேபோல, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தப் பிரச்சினை எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் எந்தக் கட்சி, எந்த அணியில் சேரும் என்பது இன்னும் முடிவாகாததால், ஆளுக்கொரு வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுகவோ, வரும் 17-ம் தேதி டெசோ கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. அந்த தேதியில்தான் காமன்வெல்த் மாநாடு முடிகிறது. அதிமுகவோ தனியாக போராட்டம் எதையும் நடத்தவில்லை. பிரதமருக்கு ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதினார். அரசு தரப்பில் இரண்டு முறை சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மதிமுக, வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை செவ்வாய்க்கிழமை ரயில் மறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி முடித்துவிட்டன. இந்தப் போராட்டத்துக்கு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை. மாணவர் அமைப்புகளும் பெரிய அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால், போராட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்துவிட்டனர். மார்க்சிஸ்ட் கட்சி தனது நிலையை தெளிவாக தெரிவிக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தனியாக நாளை (15-ம் தேதி) ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. தேமுதிகவோ இந்த விவகாரத்தில் வெறும் அறிக்கையோடு நிறுத்திக் கொண்டது. பா.ஜ.க.வைப் பொருத்தவரை தமிழக தலைவர்கள் ஒரு கருத்தையும் தேசியத் தலைவர்கள் வேறு கருத்தையும் தெரிவித்துள்ளனர்.
இப்படி ஒவ்வொரு கட்சிகளும் ஆளுக்கொரு திசையில் தனித்தனியே போராட்டம், அறிக்கை என்று ஒற்றுமையின்றி செயல்படுவதால்தான், காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை வெற்றி பெறவில்லை. அதனால்தான் தமிழகத்தை வஞ்சித்துவிட்டு மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டுள்ளது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.