Last Updated : 15 Feb, 2017 10:43 AM

 

Published : 15 Feb 2017 10:43 AM
Last Updated : 15 Feb 2017 10:43 AM

மக்கள் விருப்பம் பன்னீர்செல்வம் பக்கம்

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாகவும், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டுமெனவும் திருப்பூர், நீலகிரி மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி (அதிமுக முதலிபாளையம் கழகச் செயலாளர்):

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர, கட்சியினர் ஆதரிக்க வேண்டும்.

ராஜன் (அதிமுக திருப்பூர் மாநகர் 42-வது வார்டு பொருளாளர்):

அதிகாரம், ஆணவம், குடும்ப ஆதிக்கம் தமிழகத்தில் மீண்டும் நுழைவதற்கு, நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியைத் தொடர வேண்டும்.

ஷாஜகான் (தனியார் தொழிலாளி - திருப்பூர்):

தாமதிக்கப்பட்ட நீதியாக இருந்தாலும், 21 ஆண்டுகளுக்குப் பிறகு, நல்லதொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகி நிலையான ஆட்சி வழங்கலாம்.

சுரேஷ் (பூக்கடைத் தொழிலாளி - திருப்பூர்):

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஜெயலலிதா மறைந்த பிறகு, கடந்த 2 மாதங்களாக நடத்தப்பட்டது போன்ற ஆட்சியை, ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டும்.

டி.ராஜலெட்சுமி (தனியார் நிறுவன ஊழியர் திருப்பூர்):

தவறு செய்தால் தண்டனையை அனுபவித்துதான் தீர வேண்டும். செய்த தவறுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. கட்சிக்காக உழைத்தவர்கள்தான் முதல்வராக வர வேண்டும்.

கிறிஸ்டினா (தனியார் பள்ளி ஆசிரியை திருப்பூர்):

தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்புக்கும் கடந்த முறை நீதிமன்றம் வழங்கியதைப்போல், மேல்முறையீடு செய்வதற்கு இடம் அளிக்கக்கூடாது. தவறுக்கான உறுதியான தீர்ப்பாகவே பார்க்கிறோம். முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டும்.

நடராஜன் (மூங்கில் கூடை விற்பனை தொழிலாளி திருப்பூர்):

தீர்ப்பை வரவேற்கிறோம். மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது.

எஸ்.விஜயகுமார் (பின்னலாடைத் தொழிலாளி திருப்பூர்):

சசிகலா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கட்சி உடையாமல், அடுத்த 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை தொடர வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியைவிட அனுபவம் வாய்ந்த ஓ.பன்னீர்செல்வமே முதல்வர் பணியை தொடர வேண்டும்.

சி.மகேந்திரன் (பொள்ளாச்சி எம்.பி.):

நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். தீர்ப்பை, மறுபரிசீலனை செய்யக்கோரி கட்சி சார்பில் வலியுறுத்தப்படும்.

ஆர்.எஸ்.கனகராஜ் (விவசாயி - உடுமலை):

இத்தீர்ப்பு மூலமாக, மக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் மீட்டெடுத்துள்ளது. ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு பாடம் புகட்டுவதாய் அமைந்துள்ளது. இனியாவது லஞ்சம், ஊழல் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும்.

கலா (சிறு வியாபாரி உதகை):

இதுபோன்ற தீர்ப்புகள், ஊழல்வாதிகளுக்கு பாடமாக இருக்கும். உண்மை வெளி வந்துள்ளது.

ராஜா முகமது (அதிமுக உதகை நகர முன்னாள் செயலாளர்):

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினோம். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் ஒன்றிணைந்து செயல்படுவோம். இத்தீர்ப்பை ஏற்றுகொள்கிறோம்.

சரவணன் (சுற்றுலா பயணி பெங்களூரு):

நீண்ட காலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் தீர்ப்பு, ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை. இதை வரவேற்கிறேன்.

பா.மு.முபாரக் (திமுக நீலகிரி மாவட்டச் செயலாளர்):

திமுக தொடர்ந்த இவ்வழக்குக்கு வெற்றி கிடைத்துள்ளது. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதைபோல், இத்தீர்ப்பு ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக அமைந்துள்ளது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு சரியானது என தெரியவந்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், இத்தீர்ப்பு அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x