

சைதாப்பேட்டை தொகுதியில் தின மும் 5 மணிநேரம் நடந்து சென்று திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். 3 நாட்களில் பெறப்பட்ட 250 மனுக்களில் 50-க்கு தீர்வு கண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் எல்லாம் வறண்டு போய் உள்ளன. சைதாப்பேட்டை மக்கள் அன்றாட தண்ணீர் தேவையை தீர்க்க கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘உங்களை தேடி உங்கள் எம்எல்ஏ’ எனும் திட்டம் மூலம் கடந்த 17-ம் தேதி முதல் சைதாப்பேட்டை தொகுதி மக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து வருகிறேன். அலுவலக நாளான திங்கள் முதல் வெள்ளி வரையில் தினமும் 5 மணிநேரம் நடந்து சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறேன்.
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அதற்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளை சந்தித்து வருகிறேன். இதுவரையில் மொத்தம் 250 மனுக்களை மக்களிடமிருந்து பெற்றுள்ளேன். பெரும்பாலான மக்கள் குடிநீர் பிரச்சினையை புகாராக தெரிவிக்கின்றனர். குடிநீர் தொட்டிகள் இல்லை, போதிய அளவில் குடிநீர் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர். இதற்காக லாரிகள் மூலம் குடிநீர் கொண்டுவர ஏற்பாடு செய்துள்ளோம்.
இதேபோல் கொசு தொல்லை, தெரு விளக்குகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது. வரும் மே 5-ம் தேதி வரையில் சைதாப்பேட்டை தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டு சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் மூலம் தீர்வு காணவுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.