Published : 03 Nov 2014 08:49 AM
Last Updated : 03 Nov 2014 08:49 AM

நள்ளிரவில் காதலனைச் சந்திக்க காவலை மீறி காணாமல் போகும் சம்பா யானை: ஜார்க்கண்ட் சரணாலயத்தில் சுவாரஸ்யம்

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள டல்மா தேசிய பூங்காவில் ‘சம்பா’ என்ற பெண் யானை அடிக்கடி நள்ளிரவில் காணாமல் போய்விடுகிறது. 2 மணி நேரத்தில் சமர்த்தாக சரணாலயம் திரும்பிவிடுகிறது.

டல்மா தேசிய பூங்காவில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இங்கு, சம்பா என்ற பெண் யானை பராமரிக்கப்படுகிறது. ஈச்சாகர் எனும் இடத்தில், உரிய அனுமதி பெறாத யானைப் பாகனிடம் இருந்து இந்த பெண் யானை சம்பா கடந்த 2010-ல் வனத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது முதல், யானைகள் மறுவாழ்வு மையத்தில் சம்பா பராமரிக்கப்படுகிறது.

சம்பா அடிக்கடி நள்ளிரவு 12 மணிக்கு காணாமல் போய், சமர்த்தாக 2.00 மணிக்கு திரும்பி வந்து விடுகிறது. தனது காட்டு யானைக் காதலனைச் சந்திக்கவே, இரவில் ரகசியமாக வெளியேறிவிடுகிறது சம்பா.

தினமும் நள்ளிரவு 12.00 மணி முதல் 2.00 மணி வரை சம்பாவைத் தேடி அருகிலுள்ள காட்டில் இருந்து 25 வயது ஆண் யானை வருகிறது. இவை இரண்டுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

காதலனுடன் காட்டுக்குள் சென்று விடாமல், நல்ல பிள்ளையாக மீண்டும் திரும்பிவிடுகிறது சம்பா.

இது குறித்து ‘தி இந்து’விடம் டல்மா சரணாலயத்தின் பாதுகாப்புக் காவலர்களில் ஒருவரான காலேஷ்வர் பகத் கூறியதாவது:

சம்பாவை கயிறு மூலம் கட்டி வைத்திருக்கிறோம். ஆனாலும் பல நாட்களில் இரவில் காணாமல் போய் விடுகிறது. அதைக் கண்காணித்த போது, அது தன்னைத் தேடி வரும் காதலனைச் சந்திக்க, காட்டிலுள்ள அருங்காட்சியகத்துக்கு அருகில் சென்று விடுகிறது. சிறிது நேரம் தனிமையில் இருந்துவிட்டு பின் கொட்டடிக்குத் திரும்பிவிடுகிறது.

அந்த இரு யானைகளுக்குள்ளும் காதல் மலர்ந்துவிட்டது. அவை மகிழ்ச்சியுடன் இருக்கின்றன என்றார்.

முரடனை சாதுவாக்கிய காதல்

சரணாலய வனச்சரகர் மங்கல் கச்சப் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘இந்தக் காதல் கடந்த 2012 முதல் தொடர்ந்து வருகிறது. குளிர்காலத்தில் இவைகளின் சந்திப்பு அதிகமாகி விடு கிறது. சம்பாவின் காதலனான அந்தக் காட்டு யானை, பொதுமக்களைக் கண்டால் தாக்கும் குணம் கொண்டது.

ஆனால், சம்பாவுடன் காதல்வயப்பட்டதில் இருந்து வனப்பகுதிக்குள் பணிக்கு வரும் கிராமவாசிகளை கண்டாலும் அது தாக்காமல் அமைதியாக போய் விடுகிறது. இந்தக் காதலால், சம்பா விரைவில் கர்ப்பமாகி ஒரு குட்டியைத் தரும் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பத்திரமாகத் திரும்புவது ஏன்?

சரணாலயத்தில் நல்ல உணவு உண்டு பழகிவிட்டதால், சம்பா தனது காதலனுடன் செல்லாமல், நள்ளிரவு சந்திப்புக்குப் பின் திரும்பிவிடுகிறது. காட்டு யானைகள் பழக்கப்பட்ட யானைகளுடன் காதல் கொள்வது அரிதான விஷயம். இருப்பினும், காட்டு யானை சம்பாவிடம் காதல் வயப்பட்டிருக்கிறது.

இவ்வாறு, கச்சப் தெரிவித்தார்.

மேற்கு வங்க எல்லையில் அமைந்து ள்ள மகுலாகோச்சா வனப் பகுதியில் 193 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள டல்மா சரணாலயத்தில் சுமார் 160 யானைகள் வாழ்ந்து வருகின்றன. விபத்துக்குள்ளாவது உட்படப் பல்வேறு காரணங்களால் மீட்கப்படும் யானைகள், டல்மா சரணாலயத்தில் மறுவாழ்வு அளிக்கப்பட்டு மீண்டும் காட்டில் விடப்படுகின்றன.

ஓடிப்போன யானை!

காட்டு யானை- வளர்ப்பு யானை காதல் புதிய செய்தி அல்ல. ஏற்கெனவே ஒருமுறை ஒலிம்பிக் சர்க்கஸில் இருந்த 26 வயது சப்திரி எனும் பெண் யானை, அருகிலுள்ள ஜார்க்கண்ட் வனப்பகுதியில் வசித்து வந்த ஒரு காட்டு ஆண் யானையுடன் காதல் வயப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தின் ராஜ்கஞ்ச் எனும் இடத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்க்கஸ் நடைபெற்றபோது, சப்திரி திடீரென காணாமல் போய்விட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு, தன் காதலனுடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சப்திரியை பற்றிக் கேள்விப்பட்டு, சர்க்கஸ் நிறுவனத்தார், அதை தேடிப் பிடித்து மீட்டு வந்தனர். 2 முறை தன் காதலுடன் வனம்புகுந்து விட்டது சப்திரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x