Last Updated : 23 Sep, 2014 12:26 PM

 

Published : 23 Sep 2014 12:26 PM
Last Updated : 23 Sep 2014 12:26 PM

வெட்டிவேரு வாசம் 2 - பெயர், முகவரி, காதல்

திரைக்கதை எழுதுவது மிகவும் சவாலான ஒரு விஷயம். எதைச் சொல்ல வேண்டும் என்றாலும் ஒரு நிகழ்வின் மூலமாகவே சொல்ல வேண்டிய கட்டாயம். எங்கள் திரைக்கதைகளில் இடம்பெறும் சில நிகழ்வுகள் எங்களுக்கு நேர்ந்த உண்மையான அனுபவங்களின் மீது எழுப்பப்பட்டவை. எங்கள் அனுபவம் என்ன, அது திரையில் எப்படி காட்சியானது என்பதை சொல்வதே... ‘வெட்டிவேரு வாசம்!’

1987 -ம் வருஷம். லேனா தமிழ்வாணனிடம் இருந்து ஒரு கடிதம்: “கல்கண்டில் நீங்கள் ஒரு தொடர் எழுதலாமே.”

உடனே அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். உத்தேசத் தலைப்புகளைச் சொல்வதற்கு நேரம் கேட்டோம். அன்றைய தேதியில், செல்போன்கள் விஞ்ஞானக் கதைகளில் மட்டுமே இருந்தன. லேனா தன்னுடைய வீட்டு தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்.

மறுநாள் காலை அந்த எண்ணுக்கு டயல் செய்தோம்.

“ஹலோ..” என்றது லேனாவின் குரல்.

“நாலு தலைப்பு தர்றோம் சார். ‘துப்பாக்கி நாட்கள்,’ ‘எல்லையில் ஓர் எதிரி.’

குறுக்கில் புகுந்து அவர் குரல் எங்களைக் கத்தரித்தது.

“மன்னிக்கணும். லேனா வீட்டுல இல்லை. ஒரு மணி நேரம் கழிச்சுப் பேசுங்க...”

தொடர்பு அறுந்தது.

“டேய், கல்கண்டுல நம்ம தொடர் இல்லை.”

“ஏன், என்னாச்சு?”

“லேனாவே போனை எடுத்து, 'லேனா வீட்டுல இல்லை'ன்னு சொல்றாருடா. பேச தர்மசங்கடப்படறாரு...”

“கருப்புக் கண்ணாடி போட்டிருந்தாரா..?”

“அதெல்லாம் போன்ல தெரியாதுடா...”

“எதுக்கும் போன் பண்ணிப் பார்ப்போமே.”

எப்படியும் போனை எடுக்க மாட்டார் என்று நினைத்தே, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போன் செய்தோம்.

“ஹலோ, சுபா பேசறோம்…”

“போன் பண்ணுனீங்கனு தம்பி சொன்னாரு. தலைப்பு ரெடி பண்ணிட்டீங்களா?”

ஆச்சர்யமானோம்!

பிற்பாடு, மணிமேகலைப் பிரசுரத்துக்கு ஒருமுறை சென்றபோது, ஓர் அறைக்குள்ளே இருந்து லேனாவும், லேனாவும் பேசும் குரல் கேட்டு மறுபடி ஆச்சர்யமானோம். அங்கே, லேனாவின் சகோதரர் ரவி தமிழ்வாணனை முதல்முறையாகச் சந்தித்தோம். அச்சு அசலாக அப்படியே லேனாவின் குரல்!

அப்புறம், பல சந்திப்புகளில் அந்த அனுபவம் பற்றி சொல்லிச் சிரித்திருக்கிறோம்.

குரல் ஒற்றுமையால் நேர்ந்த இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு. நண்பர்கள் பாலா, பாஸ்கர், அலீம் மூவருமாக என்னைப் பயமுறுத்தத் திட்டமிட்டார்கள். அழைப்பு மணியை ஒலித்துவிட்டு, கதவுக்குப் பின்னால் ஒளிந்தார்கள்.

“ஒன் மினிட்” என்று குரல் கொடுத்த படி என் அண்ணன் சென்று கதவைத் திறந்தான். நண்பர்கள் “பவ்வ்வ்வ்...” என்று கத்தியபடி புலிப் பாய்ச்சல் பாய்ந்தார்கள். மிரண்டு போன என் அண்ணன், நான்கடி பின்னால் நகர, அது நானல்ல என்று பார்த்து மிரண்ட நண்பர்கள் எட்டடி பின்னால் பதுங்க, என் அண்ணன் சிவந்துபோன முகத்துடன் உள்ளே வந்தான்.

“உன்னைத் தேடி மூணு குரங்கு வந்திருக்கு” என்றான்.

இவற்றை எல்லாம் தூக்கி அடிக்கும் இன்னொரு சம்பவம்...

ஒரு காலை நேரம். அலுவலகம் புறப்படத் தயாராக டிபன் பாக்ஸை பையில் அடைத்துக்கொண்டிருந்தேன். அண்ணன் அப்போதுதான் குளித்துவிட்டு ஈர டவலுடன் வெளியில் வந்திருந்தான். அவனைப் பார்க்க, ஹாலில் காத்திருந்தான், இளைஞன் ஒருவன்.

“யாரு..?” என்றான் அண்ணன்.

“சார், நான் லோகுவோட தம்பி!”

லோகு என் அண்ணனின் நண்பன். “நீங்க, பணம் தர்றேன்னு சொன்னீங்களாம்.”

“உக்காருங்க… வர்றேன்.” ஈர டவலுடன் இருந்ததால், உடை அணிய அண்ணன் உள்ளே போய்விட்டான்.

நான் டிபன் பையைத் தூக்கிக் கொண்டு, செருப்புகளை மாட்டிக் கொண்டு, “வரேம்மா…” என்று சொல்லி விட்டு, தெருவில் இறங்கினேன். பஸ் பிடிக்க வேகமாக நடந்தேன். கூடவே, வேறு ஒரு நிழல். திரும்பிப் பார்த்தால், அண்ணனுக்காகக் காத்திருக்க வேண்டியவன். என் பின்னாலேயே வேகம் வேகமாக வந்துகொண்டிருந்தான்.

நின்றேன். “என்ன..?” என்றேன்.

“பணம் தர்றேன், உட்காருன்னு சொல்லிட்டு எதுவுமே தராம கிளம்பிட் டீங்களே, சார்..?”

“அய்யோ, அது நான் இல்ல. எங்க அண்ணன். அவர் இன்னும் வீட்லதான் இருக்கார். நான் ஆபீஸ் போயிட்டு இருக்கேன்…”

அவன் என்னை சந்தேகத்தோடு திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போய், பக்கத்து வீட்டு கேட்டைத் திறந்து நுழைந்துவிட்டான். அவனைத் துரத்திக்கொண்டு ஓடினேன்.

“இது இல்ல எங்க வீடு. அடுத்த வீடு...” என்று வழிகாட்டினேன்.

அன்று பேருந்தில் கூட்டம் அம்மியது. முகவாயைக் கூடப் பிடித்து உயர்த்தும் முழங்கைகள். நடுவில் நான் சிரிப்பை அடக்க முடியாமல், நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தேன்.

‘180’ படத்தின் திரைக்கதையை எழுதியபோது, மேற்கூறிய அனுபவங்கள் தான் ஒரு சுவாரஸ்யமான காட்சியை அமைக்க உதவின.

சித்தார்த் ஒரு சாப்பாட்டுக் கூடை கிழவியை பைக் பில்லியனில் ஏற்றிச் செல்வதைப் பார்த்து வியப்பார், கதாநாயகி நித்யா மேனன். சித்தார்த்தை தற்செயலாகச் சந்தித்து, பெயர் கேட் பார். சித்தார்த்தோ அமிதாப் பச்சன் என்றும், டெண்டுல்கர் என்றும் சொல்லிக் குழப்பிவிட்டுப் போவார். அவர் ஓட்டும் இரவல் மோட்டார் பைக்கின் எண்ணை வைத்து, முகவரி பிடித்து தேடிக்கொண்டு வருவார் நித்யா மேனன். அழைப்பு மணி ஒலிக்க, உள்ளேயிருந்து மவுலியின் மனைவி கீதா வருவார்.

“மூர்த்தி..?”

“என் வீட்டுக்காரர்தான்...”

“இந்த பைக்கை ஓட்டுவாரே?”

“ஆமா. அவரை எப்படித் தெரியும்?”

“பில்லியன்ல ஒரு லேடியைக் கூட்டிட்டுப் போனபோது முதல் தடவை பார்த்தேன்...”

“ஏங்க... யாரோ கேர்ள் ஃப்ரெண்டை பைக்ல உக்கார வெச்சிக் கூட்டிட்டுப் போனீங்களாமே?” என்ற மனைவியின் எரிச்சலான குரலைக் கேட்டு உள்ளேயிருந்து வெளியே வருவார் மவுலி.

“நான்தான் மூர்த்தி.”

சித்தார்த்தை எதிர்பார்த்து நிற்கும் நித்யா மேனன் மவுலியைப் பார்த்து, திகைத்துக் குழம்பிப் போவார்.

“அப்ப அமிதாப் பச்சன்?”

“அமிதாப் பச்சன்? (உள்ளே திரும்பி ஹலோ அமிதாப் பச்சன். நித்யா மேனனிடம் திரும்பி) யாரும் வரல இல்லையா? அப்ப அவர் இங்க இல்லை.”

“அப்படினா டெண்டுல்கர்?” என்று உள்ளே எட்டிப் பார்ப்பார், நித்யா மேனன்.

“அடுத்தது ஏ.ஆர்.ரஹ்மானா?” என்று மவுலி கேட்க, தியேட்டரில் சிரிப்பலைகள் படரும்.

- வாசம் வீசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x