Published : 13 Jan 2017 10:17 AM
Last Updated : 13 Jan 2017 10:17 AM

தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது: நீதிமன்றத்தில் இருந்தே சோதனை நடத்திய நீதிபதி உத்தரவு

நடிகர் விஜய் நடித்து வெளி யாகியுள்ள ‘பைரவா’ திரைப்படத் துக்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கோரி சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் திருந்தார். இந்த மனு மீதான விசா ரணை நேற்று காலை நீதிபதி டி.ராஜா முன்புநடந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் “திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக் கும் குழு குறித்து மக்களிடையே எந்த விழிப்புணர்வும் இல்லை. அக்குழுவின் தொலைபேசி எண் களை தொடர்பு கொள்ளக்கூட முடியவில்லை. இதேபோல ஆன் லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்தால் கூடுதல் கட்டணம் வசூ லிக்கின்றனர்” என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து நீதிபதி டி.ராஜா, அரசு கூடுதல் தலைமை வழக் கறிஞர் சி.மணிசங்கரிடம், “இப் போதே மதுரை மாவட்டத்துக்கான கண்காணிப்புக் குழுவை தொடர்பு கொண்டு பேசுங்கள்” என்றார். ஆனால் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதே போல் பிற மாவட்ட எண்களும் இணைப்பில் கிடைக்கவில்லை. இறுதியாக திருச்சி மாவட்ட எண்ணில் மட்டும் அரசு வழக்கறிஞர் தொடர்பு கொண்டு “நீதிமன்றத்தில் இருந்து பேசுகிறோம்” என்றார்.

அப்போது நீதிபதி, ‘‘இங் கிருந்து பேசும்போதே கண் காணிப்பு குழுக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகு பொதுமக்களின் அழைப்பை அந்த கண்காணிப்புக்குழு எப்படி ஏற்கும்?” என கேள்வி எழுப்பினார்.

திரையரங்குகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பொது மக்கள் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்யும்போது இணைய தள சேவை நிறுவனங்கள் சேவை கட்டணம் வசூலிப்பதால்தான் கட்டணம் கூடுகிறது” என்றார்.

அதையடுத்து வழக்கை பிற் பகலுக்கு தள்ளி வைத்த நீதிபதி டி.ராஜா, இடைப்பட்ட நேரத்தில் தனது உதவியாளர் மூலமாக ஆன்லைன் வழியில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ‘பைரவா’ திரைப்படத்துக்கு 2 டிக் கெட்களை முன்பதிவு செய்ததா கவும், அதில் அரசு நிர்ணயம் செய்த தொகையைவிட கூடுதலாக ரூ.60 பெறப்பட்டதாகவும் கூறினார்.

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சி.மணி சங்கர், தான் ஒரு இணையதளத்தில் பதிவு செய்த டிக்கெட்டுக்காக சேவை வரியாக மட்டும் ரூ. ஆயிரம் வசூலிக்கப்பட்டது என வேதனை தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி டி.ராஜா, ‘‘தமிழகத்தில் உள்ள திரையரங்கு களில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து 3 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x