

வீடு மற்றும் 50 ஏக்கர் பூர்வீக நிலத்தை அபகரிக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக தாய் அளித்த புகாரின்பேரில், திருப்பரங்குன்றம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ ஏ.கே.டி. ராஜாவை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருமண விழாவில் பங்கேற்க மதுரை வந்து சென்ற மறுநாளே, அக்கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டது தேமுதிகவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தேமுதிகவைச் சேர்ந்த ஏகேடி ராஜா உள்ளார். இவரது தாய் ஒச்சம்மாள், மதுரை மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணனிடம் அளித்த புகார் மனுவில், 'உசிலம்பட்டி டவுன் கருப்பு கோயில் தெருவில் வசிக்கிறேன். எனக்கு 4 பிள்ளைகள். குடும்ப பூர்வீக சொத்தாக ஒரு வீடும், தொட்டப்பநாயக்கனூரில் 50 ஏக்கர் நிலமும் உள்ளது. இந்த வீடு, இடம் முழுவதையும் தனக்கே வழங்க வேண்டும் என ராஜாவும், அவரது மனைவி ராணியும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும், போலியான ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை விற்க முயற்சித்தனர். கடந்த 16ம் தேதி எனது வீட்டிற்கு வந்து, இரவுக்குள் வீட்டிலிருந்து வெளியேறாவிட்டால் ஜேசிபி இயந்திரத்தால் வீட்டை இடித்து, என்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஏ.கே.டி. ராஜாவை திங்கள்கிழமை எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் ஒச்சம்மாள் அளித்த புகார் உண்மையெனத் தெரியவந்ததால், அவரைக் கைது செய்து ஜெ.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி எஸ்.பி பாலகிருஷ்ணன் கூறுகையில், 'ஒச்சம்மாளின் பூர்வீக சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், மற்ற பிள்ளைகளுக்கு நிலத்தை கொடுக்கக் கூடாது என ஏகேடி ராஜா மிரட்டியதாகப் புகாரில் கூறப்பட்டிருந்தது. விசாரணையில் அது உண்மை என தெரியவந்தது. எனவே இதுபற்றி 406, 420, 506/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஏகேடி ராஜாவைக் கைது செய்தோம்' என்றார்.