Published : 07 Sep 2016 08:31 AM
Last Updated : 07 Sep 2016 08:31 AM

பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு எப்போது? - முடங்கிக் கிடக்கும் முதல்வர் தொடங்கிய திட்டம்: உள்ளகரம் புழுதிவாக்கம் மக்கள் கடும் அதிருப்தி

உள்ளகரம் புழுதிவாக்கத்தில் பாதாள சாக்கடை மற்றும் புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சியாக இருந்து 2009-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது 14-வது மண்டலம் பெருங்குடி மண்டலத்தில் இந்த பகுதி வருகிறது. இப்பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

பணிகள் தொடக்கம்

ஜவஹர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 2011-ம் ஆண்டு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்களுக்கான பணிகள் தொடங்கின. தற்போது பாதாள சாக்கடைக்கு குழாய் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளன. அதேநேரம் புழுதிவாக்கம் சித்தேரி மற்றும் சுடுகாட்டு பகுதியில் கழிவுநீர் உந்து நிலையப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

உள்ளகரம்-புழுதிவாக்கம் பகுதிகளில் நடைபெற்று வந்த குடிநீர் பணிகளும் நிறைவடைந்துள்ளன. அங்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ல் காணொலி காட்சி மூலம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார்.

2 ஆயிரம் விண்ணப்பங்கள்

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் குடிநீர் இணைப்புக்கு 3 முறை முகாம் நடத்தப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் இன்றுவரை புதிய இணைப்புகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. மனுக்கள் மீது உரிய நடவடிக்கையும் இல்லை. ஆனால் மாதம்தோறும் ரூ.180 குடிநீருக்கான கட்டணமாக பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. குடிநீர் விநியோகம் இல்லாமல் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுவதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் சதுர அடிக்குள் வீடு இருந்தால் ரூ. 5 ஆயிரமும் அதற்கு மேல் இருந்தால் ரூ. 7,500-ம் வைப்பு தொகை பெற முடிவு செய்யப்பட்டது. இதுவரை மாநகராட்சி சார்பில் வைப்பு தொகையும் பெறப்படவில்லை.

குடிநீர் வைப்பு தொகையுடன் உள்கட்டமைப்பு கட்டணம் என்ற பெயரில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.110 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் யாருக்கு பொருந்தும் என படிவத்தில் தெளிவாக இல்லை. அதிகாரிகளிடம் விவரம் கேட்டாலும் பதில் கிடைப்பதில்லை என குற்றம் சாட்டுகின்றனர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள்.

அதேநேரம் புதிய குடிநீர் இணைப்புக்கு ரூ. 5 ஆயிரம் வரை மறைமுகமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு ரசீது வழங்குவதில்லை. பள்ளம் பறிக்க, குழாய் பதிக்கவும் தனியாக குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டியுள்ளது. குடிநீர் இணைப்பை காரணம் காட்டி ஆளும் கட்சியினர், அலுவலர்கள் பெரும் தொகையை வசூலிப்பதாகவும் நலச்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கட்டணத்தை குறைக்க வேண்டும்

எனவே மாநகராட்சி நிர்வாகம் உள்ளகரம் புழுதிவாக்கம் பகுதியில் விரைவில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் மற்றும் புதிய குடிநீர் குழாய் இணைப்பை தாமதமின்றி வழங்க வேண்டும். மேலும் உள்கட்டமைப்பு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய அதிகாரி கூறியதாவது:குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. மனுவில் அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு, புதிய குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் தொடர்பான அனைத்து தகவல்களும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அணுகி தெரிந்துகொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x