Published : 09 Oct 2013 05:35 PM
Last Updated : 09 Oct 2013 05:35 PM

மதுரைக்குள் பதுங்கியிருக்கும் இருபது பேர் - பிலால் மாலிக்கின் பகீர் வாக்குமூலம்

அல் - உம்மா தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கிடம் விசாரணை சுமூகமாக சென்று கொண்டிருப்பதாக வெளியில் கூறினாலும், ஹெவி ட்ரீட்மென்ட் கொடுத்து விசாரித்துக் கொண்டிருக்கிறதாம் போலீஸ். அப்படியிருந்தும் நினைத்த மாதிரி தகவல்களை கறக்கமுடியவில்லையாம். இதனிடையே, போலீஸ் பக்ருதீன் கொடுத்த க்ளூவை வைத்து அபுபக்கர் சித்திக்கை தேடி ஆந்திராவில் முகாம் போட்டிருக்கிறது தமிழக போலீஸின் ஒரு பிரிவு.

பிலால் மாலிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிரவைக்கும் ஒரு தகவல் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள். 'அல் - உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இளம் படையினருக்கு மதுரைக்குள் வைத்தே சகல பயிற்சிகளும் கொடுக்கப்பட்டிருக்கு. அவர்களில் சுமார் நாற்பது பேர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறார்கள். இதில் மதுரையில் மட்டுமே இருபது பேர் இருக்கிறார்கள்' இதுதான் அந்த அதிர்ச்சித் தகவல்.

விசாரணையை இறுக்கிப்பிடித்து மதுரைக்குள் பதுங்கி இருக்கும் அந்த இருபது பேர்களின் பெயர்களையும் வாங்கிவிட்டதாக சொல்கிறார்கள். அவர்களை வளைப்பதற்காக விரைவில் போலீஸ் படை ஒன்று மதுரைக்கு கிளம்பலாம்!.

இதுகுறித்து மதுரை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரிடம் பேசினோம். '' ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செஞ்சு அனைத்துப் பயிற்சிகளையும் குடுக்குறாங்க. இந்த இளைஞர்களை பற்றிக் கேட்டால், வெளிநாட்டு வேலைக்கு போயிருப்பதாக அவர்களின் வீடுகளில் சொல்லுவாங்க. ஆனால், அவர்கள் சென்னை, மும்பை, பெங்களூர் என எங்காவது இயக்க பணிக்காக சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களின் வீடுகளுக்கு மாதம் தவறாமல் சம்பளப் பணம் போய்விடும்'' என்று சொன்னார் அந்த அதிகாரி.

செப்டம்பர் 29 -ம் தேதி இமாம் அலி நினைவு தினம். ஏற்கெனவே குறிவைத்து தப்பிப் போன சிவசேனா மாநிலத் தலைவர் தூதை செல்வத்தை முடிப்பதற்கு இந்தத் தேதியைத்தான் போலீஸ் பக்ருதீனின் ஆட்கள் தேர்வு செய்திருந்தார்களாம். இதை தெரிந்து கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார், 'செப்டம்பர் 29-ம் தேதி மதுரையில் இருக்க வேண்டாம்' என தூதை செல்வத்தை எச்சரித்தார்களாம். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வசதியாக அவரது செல்போனில் போலீஸ் உயரதிகாரிகளின் செல்போன் நம்பர்களை ஸ்பீடு டையல் லிஸ்டில் ஏற்றிக் கொடுத்தார்களாம்.

போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் கோஷ்டியின் டார்க்கெட்டில் இருக்கும் இன்னொரு முக்கிய நபர் மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன். இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்த காளிதாஸை இப்ராஹிம் ஷா, சேக் அலாவுதீன், கருவா ஹக்கீம், மன்னர் மைதீன், பிலால் மாலிக், மைதீன் பீர் ஆகிய ஆறு பேர் தான் வெட்டிக் கொன்றதாக வழக்கு. அந்த நேரத்தில் பிலால் மாலிக் மைனராக இருந்ததால் அவருக்கு மட்டும் தனியாக வழக்கு நடந்தது. இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற ஐந்து பேரில் மூவர் விடுவிக்கப்பட்டு, இப்ராஹிம் ஷா, சேக் அல வுதீனுக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கை முன்னின்று நடத்தியவர் சோலைக்கண்ணன். இதனால் தான் போலீஸ் பக்ருதீன் கோஷ்டி இவரையும் ஹிட் லிஸ்டில் ஏற்றி இருக்கிறது.

விசாரணையின் போது, ''காளிதாஸ் கொலையில் சோலைக்கண்ணனும் அவரது ஆட்களும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.

'தலையை தனியா வெட்டி எடுத்துட்டு போயிருவோம்'னு கோர்ட்டுல வைச்சு எச்சரிச்ச பின்னாடியும் சோலைக்கண்ணன் திருந்தல. தொடர்ந்து எங்களுக்கு குடைச்சல் குடுத்துட்டே வந்தவர், சுதந்திர தினத்தன்று மதுரையில் ஒரு அமைப்பு நடத்திய பேரணி அணி வகுப்புக்கு எதிராக வந்தேமாதரம் அணி வகுப்பு நடத்துவோம்னு சொன்னாரு.

தொடர் வெடிகுண்டு சம்பவங்களுக்கு காரணமான போலீஸ் பக்ருதீனை கைது பண்ணனும்னு சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துனவரு, “நாங்களும் பதிலுக்குப் பதில் ஆயுதம் ஏந்துவோம்'னு எங்களை எச்சரிக்கிற மாதிரிப் பேசுனாரு. இனியும் இந்த ஆளைவிட்டு வைக்கக் கூடாதுன்னு தான் ஹிட் லிஸ்டில் ஏத்துனோம்'' என்று சர்வ சாதாரணமாய் சொன்னாராம் பிலால் மாலிக்.

“மூளைச்சலவை செஞ்சு அனைத்துப் பயிற்சிகளையும் குடுக்குறாங்க. இவர்கள் வெளிநாட்டு வேலைக்கு போயிருப்பதாக அவர்களின் வீடுகளில் சொல்லுவாங்க. ஆனால், அவர்கள் சென்னை, மும்பை, பெங்களூர் என எங்காவது இயக்க பணிக்காக சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களின் வீடுகளுக்கு மாதம் தவறாமல் சம்பளப் பணம் போய்விடும்''.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x