Published : 14 Jan 2014 10:38 AM
Last Updated : 14 Jan 2014 10:38 AM

2016-ல் ஊழலற்ற ஆட்சியை தேமுதிக அமைக்கும்: மாநாட்டு விளக்க நிகழ்ச்சியில் எல்.கே. சுதீஷ் பேட்டி

வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று ஊழலற்ற ஆட்சியை அமைக்கும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

உளுந்தூர்பேட்டையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டின் மையக் கருத்து, சின்னம் மற்றும் விளம்பர உத்திகள், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பின்னர், தேமுதிகவின் இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் பிப்ரவரி 2–ம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே ஊழல் எதிர்ப்பு மாநாடு நடக்கிறது. 2005–ம் ஆண்டு கட்சி தொடங்கியதில், இருந்தே ஊழலை எதிர்த்து வருகிறோம். வருகிற 2016–ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆட்சி வரும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க. ஆகிய அனைத்து கட்சிகளும் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி குறித்து பேச தலைவர் விஜயகாந்த் 3 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார்.

வரும் 17–ம் தேதிக்கு பிறகு அக்குழுவினர் தலைவர் விஜயகாந்திடம் அறிக்கை தருவார்கள். அதன் பிறகு யாருடன் கூட்டணி என முடிவு செய்யப்படும். பிப்ரவரி 2–ம் தேதி நடைபெறும் மாநாட்டில் தொண்டர்களிடம் கருத்து கேட்டு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். இந்தியாவிலேயே தேமுதிகவில் தான் இளைஞர்கள் அதிக அளவில் உறுப்பினர்களாக உள்ளனர். இளைஞர்கள் மீது நம்பிக்கை உள்ளது. அதன்மூலம் 2016–ல் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.

2006 மற்றும் 2009 சட்டசபை தேர்தல்களில் நான் போட்டியிட்டு இருக்கிறேன். தலைவர் விஜயகாந்த் கட்டளையிட்டால், வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவேன் என்று சுதீஷ் கூறினார். இந்த சந்திப்பின்போது, தேமுதிக பொருளாளர் எ.ஆர்.இளங்கோ, தலைமை நிலைய செயலாளர் பி.பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x