Published : 29 Jun 2017 04:36 PM
Last Updated : 29 Jun 2017 04:36 PM

பொன்னேரியில் ரூ.1,295 கோடியில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் சுமார் 36 ஏக்கரில் ரூ.1,295 கோடியில் ஒரு பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தொழில் துறை சார்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

''இந்தியாவில் தொழில் துவங்க தேவையான உகந்த சூழ்நிலையும், சிறப்பான திறன் வாய்ந்த மனித வளத்தினையும், 24 மணி நேரம் கிடைக்கின்ற தரமான மின்சாரம், சுமுகமாக தொழில் தொடங்கி நடத்துவதற்கு அனைத்து சூழ்நிலைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ்நாடு.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவிலேயே மகாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் எண்ணிக்கையிலும், தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

புதிய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் பதிவு செய்வதிலும் தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்குகிறது. தொழில் துறையில் நிகர மதிப்புக் கூட்டல் படி தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் மொத்த வருவாய் மதிப்பிலும், மொத்த ஏற்றுமதியிலும் மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறுவதில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியினை மேலும் மேம்படுத்த பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் புழுதிவாக்கம், வாயலூர் கிராமங்களில் சுமார் 36 ஏக்கரில் ரூ. 1,295 கோடியில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையக் குழுவுடன் இணைந்து ஒரு பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் 1,032 ஏக்கரில் சிப்காட் தூத்துக்குடி தொழில் வளாகம் -1 செயல்பட்டு வருகிறது. இதனையொட்டி ஒட்டப்பிடாரம் வட்டம் தெற்கு வீரபாண்டியபுரம், மீள்விட்டான் கிராமங்களில் 1,600 ஏக்கரில் சிப்காட் தூத்துக்குடி நிலை 2 உருவாக்கப்படும்.

இந்த வளாகத்தை மேம்படுத்தும் பொருட்டு முதலாவதாக 600 ஏக்கரில் உட்புறச் சாலைகள், தண்ணீர், மழைநீர் வடிகால், சாலையோர மரங்கள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ. 60 கோடியில் 2 ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் ரூ. 500 கோடி முதலீடும், 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 20 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு வட்டம் முள்ளுவாடி, நாகலேரி கிராமங்களில் 20 ஏக்கரில் ரூ. 4 கோடியே 74 லட்சம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் ஏனம்பாக்கம் கிராமத்தில் 216.37 ஏக்கரில் ரூ. 58 கோடியே 82 லட்சம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரியகோளாபாடி, கண்ணக்குருக்கை கிராமங்களில் 57.18 ஏக்கரில் ரூ.13 கோடியே 44 லட்சம் என 3 தொழிற்பேட்டைகள் மொத்தம் ரூ. 77 கோடியில் அமைக்கப்படும்.

ரூ.6 கோடியே 52 லட்சத்தில் 20 சேமிப்பு கிடங்குகள், நிர்வாக அலுவலகம், காட்சி மையம், பேச்சுவார்த்தை அரங்கம் ஆகியவற்றை ஈரோடு மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் அமைக்கும். அதுபோல ரூ.4 கோடியே 64 லட்சத்தில் பயிற்சி மையம், சந்தை, காட்சி மையம், பேச்சுவார்த்தை அரங்கம் ஆகியவற்றை காக்களூர் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் அமைக்கும்.

ரூ.2 கோடியே 60 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை சங்கம் அமைக்கும். இச்சங்கத்தின் சார்பில் ரூ. 5 கோடியே 1 லட்சத்தில் பயிற்சி மையம், காட்சி மையம், பொது கிடங்கு, பேச்சுவார்த்தை அரங்கம் ஆகியவை அமைக்கப்படும்.

மேற்கண்ட சங்கங்கள் அமைக்கும் திட்டங்களுக்கு அரசின் பங்குத் தொகையாக ரூ.10 கோடி வழங்கப்படும்.

நீலகிரி மாவட்டம் கைகாட்டி மற்றும் மகாலிங்கா தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தலா ரூ. 2 கோடியே 5 லட்சத்தில் மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை உற்பத்தி பிரிவுகள் தொடங்கப்படும்'' என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

















FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x