Published : 05 Apr 2017 01:08 PM
Last Updated : 05 Apr 2017 01:08 PM

ஆர்.கே.நகர் தேர்தலால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்: ஸ்டாலின் பேட்டி

ஆர்.கே.நகர் தேர்தலின் மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயமாக உருவாகப்போகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுகவினரை கையும் களவுமாக திமுகவினர் பிடிக்க முயன்றனர். அப்போது அதிமுகவினரால் தாக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தொண்டர்களை, இன்று நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

அதனைத்தொடர்ந்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஆர்.கே.நகர் தொகுதியில் தொடர்ந்து பணம் பட்டுவாடா நடைபெறுவதோடு, அதைத்தடுக்க முயலும் திமுகவினர் மீது தாக்குதல் நடைபெறுகிறது. பார்த்தசாரதி, அப்பாஸ், குலசேகரன் ஆகிய மூன்று பேரும் நேற்றிரவு தாக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மூவருக்கும் தலையில் வெட்டுப்பட்டு இருக்கிறது. ஒருவருக்கு 12 தையல்களும், ஒருவருக்கு 16 தையல்களும் போடப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கிறார்கள்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கக்கூடிய சசிகலாவின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய அணியை சேர்ந்தவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் ஒவ்வொரு வாக்காளருக்கும் 4,000 ரூபாய் வீதம் பணம் கொடுக்கும் பணியில் நேற்று முழுவதும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் 6 காவல்நிலையங்கள் இருக்கின்றன. அவற்றில் எக்ஸ்-6 (X-6) என்ற ஒரே காவல் நிலையத்தில் மட்டும் இதுவரை 28 புகார்களை திமுக சார்பில் தந்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

அஜீஸ் நகரில் மட்டும், சசிகலா அணியை சார்ந்த, கோபிசெட்டிபாளைய பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் பணம் கொடுக்க முயன்றபோது அவர்களிடம் இருந்து சுமார் 9,80,000 ரூபாய் கைப்பற்றி, காவல் நிலையத்தில் எங்களுடைய தோழர்கள் முறைப்படி ஒப்படைத்து உள்ளனர். இதையெல்லாம் பார்க்கின்றபோது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஃபெரா அணியை சேர்ந்தவர்கள் எப்படியாவது டெபாசிட் தொகையையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில், ஜனநாயகத்தை படுகுழிக்கு தள்ளி, பணநாயகத்தின் மூலம் வெற்றி பெறலாம் என்ற உணர்வோடு, பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

இந்த செய்தியை அறிந்ததும் திமுக சார்பில் நான் சென்னை மாநகரத்தின் பொறுப்பு கமிஷனராக இருக்கக்கூடியவரிடத்தில் தொலைபேசி மூலம் பேசினேன். அதன் பிறகு தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் தொலைபேசி மூலம் பேசியிருக்கிறேன். மாநகராட்சியின் கமிஷனர் கார்த்திகேயனிடமும் தொலைபேசி மூலம் பேசினேன்.

அனைவரும் 'நடவடிக்கை எடுக்கிறோம்', என்று சொல்கிறார்களே தவிர, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக எங்களுக்கு தெரியவில்லை. பொதுமக்களும், திமுக தோழர்களும் பணம் கொடுக்க வரும் சசிகலா அணியை சேர்ந்தவர்களை பிடித்துத் தருகின்றபோது, காவல்துறையினர் ஒப்புக்காக அவர்களை அழைத்துச் செல்வது போல் கொண்டு சென்று வெளியில் விடும் நிலைதான் தொடர்கிறது.

நான் நேற்றைக்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, 'டெல்லியில் இருக்கின்ற தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை முறையாக நடத்த வேண்டுமென்று கருதுகிறது, அதனால் தான் இங்கிருந்த சில அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள்', என்று குறிப்பிட்டு, அதை வரவேற்று இருந்தேன். ஆனால், இப்போதைய நிலையை பார்க்கின்றபோது, டெல்லியில் இருக்கின்ற தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை முறையாக நடத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தாலும், இங்கிருக்கக்கூடிய தேர்தல் ஆணையத்தில் இருக்கக்கூடியவர்கள், காவல்துறையை சார்ந்தவர்கள் ஃபெரா அணிக்கு கைக்கூலிகளாக இருந்து இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

எனவே, இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் புகார் அனுப்பு இருக்கின்றோம். அதுமட்டுமல்ல, நீதிமன்றத்திலும் இதுகுறித்து வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், என்னதான் இவர்கள் பணத்தின் மூலமாக வாக்குகளைப் பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், நிச்சயமாக ஃபெரா அணியாக இருந்தாலும், ஓபிஎஸ் தலைமையில் உள்ள அணியாக இருந்தாலும், இரு அணிகளும் இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வும், டெபாசிட்டை இழக்கும் நிலைதான் ஏற்படும் என்பது உறுதி.

ஆகவே, இந்த தேர்தலின் மூலமாக தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிச்சயமாக உருவாகப்போகிறது. நேற்றைக்கும், இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கக்கூடிய சம்பவங்களுக்கும், முறையாக நடவடிக்கை எடுக்கும் நிலையில் இல்லாத அதிகாரிகளை எல்லாம் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி ஆட்சி மாற்றம் ஏற்படும் நேரத்தில் உரிய நடவடிக்கையை உறுதியாக எடுப்போம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். முறைகேடுகளுக்கு உடந்தையாக இங்கிருக்கக்கூடிய கைக்கூலிகள் மீது வரவிருக்கும் காலகட்டத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்துகிறார்களா அல்லது ரத்து செய்கிறார்களா என்பது எங்களுடைய பிரச்சினையல்ல. ஜனநாயகப்படி தேர்தலை நடத்த வேண்டும். அவர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்ற நிலை இருப்பதால் தான், பணம் கொடுத்து வருகிறார்கள். டெபாசிட் வாங்குவதற்காக பணம் கொடுக்கிறார்களா அல்லது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்களா என்ற சந்தேகமும் எங்களுக்கு வந்திருக்கிறது'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x