Published : 05 Jun 2017 12:50 PM
Last Updated : 05 Jun 2017 12:50 PM

11-ம் வகுப்பில் கணினி அறிவியல், வணிகவியலுக்கு மவுசு: நீட் தேர்வு பயத்தால் உயிரியலை தவிர்க்கும் மாணவ, மாணவியர்

தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயக்கம் காட்டுவதால், நடப்பாண்டு 11-ம் வகுப்பில் கணிதம், வணிகவியல் பாடப் பிரிவுகளில் சேரவே, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உயிரியல் பாடத்துக்கு மவுசு குறைந்துள்ளது.

மாணவர்களின் கல்லூரிக் கல்வியை நிர்ணயிப்பதில் மேல்நிலைக் கல்வி முக்கியமாக உள்ளது. கடந்த காலங்களில் பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிப்பது அதிகமாக இருந்தது. பெரும்பாலான பெற்றோரின் கனவு, தங்கள் பிள்ளைகள் மருத்துவராக, இன்ஜினீயராக ஆக வேண்டும் என்பதாக இருந்தது.

அதனால், எஸ்எஸ்எல்சி முடித்தவுடன், மேல்நிலைக் கல்வியில் கணிதம் (உயிரியல்) பாடப்பிரிவில் பிள்ளைகளைச் சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். அனைத்து பள்ளிகளிலும் 11-ம் வகுப்பில் கணிதம் (உயிரியல்) பாடப்பிரிவுக்கு போட்டி கடுமையாக இருந்தது. அதன்பிறகே கணினி அறிவியல், வணிகவியல் போன்ற பாடங்களைப் பயில மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.

ஆனால், தற்போது, பிள்ளை களின் விருப்பத்துக்கு பெற்றோர் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மாணவர் களும் தங்களால் எந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பதை அறிந்து உயர் கல்வியைத் தேர்ந் தெடுக்கின்றனர்.

எஸ்எஸ்எல்சி முடிந்து உயர் நிலைக் கல்வியில் சேரும் மாணவர் கள் எந்தெந்த பாடப் பிரிவுகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்? என கல்வியாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

மாற்றம் தேவை

ஏ.வில்சன் (பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்): எங்கள் பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர கணினி அறிவியல், பொருளாதாரம், ஜெனரல் மெக்கனிஸ்ட் போன்ற பாடப் பிரிவுகளுக்கு போட்டி அதிகமாக உள்ளது. மருத்துவப் படிப்பில் சேரலாம் என்ற எண்ணத்தில் உயிரியல் பாடப் பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை முன்பைவிட குறைந்துள்ளது.

ஜெஇஇ, நீட் ஆகிய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயங்குகின்றனர். இந்த நிலையை மாற்ற, பள்ளிகளில் பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை. மாணவர்கள் மனப்பாடம் செய்யும் வகையில் பாடத்திட்டம் இருக்கக் கூடாது. மாணவர்களை சிந்திக்கத் தூண்டுவதாகவும், தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் பாடத்திட்டம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் எந்தவிதமான போட்டித் தேர்வுகளையும் எளிதாக எதிர்கொள்ளலாம்.

ஜெயேந்திரன் வி.மணி (மகாராஜநகர் ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா பள்ளி இயக்குநர்): எங்கள் பள்ளியில் 11-ம் வகுப்பில் கணிதம் (உயிரியல்) பாடப் பிரிவில் சேர அதிகமான மாணவர்கள் விரும்புகின்றனர். அதற்கு அடுத்தபடியாக கணினி அறிவியல் பாடப்பிரிவை விரும்புகின்றனர். மூன்றாவதாக வணிகவியல் பாடப் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

ஆனால், வணிகவியல் பாடப் பிரிவு பல தனியார் பள்ளிகளில் இல்லை. அரசுப் பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகளில் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு போட்டி அதிகமாக உள்ளது.

இவ்வாறு கல்வியாளர்கள் கூறினர்.

இதேபோல், வரலாறு, தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலேயே உள்ளன. தனியார் பள்ளிகளில் இவை இல்லை. எஸ்எஸ்எல்சி தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்று, வேறு எந்தப் பாடப் பிரிவுகளிலும் இடம் கிடைக்காத மாணவர்கள் இப் பிரிவுகளைத் தேர்வு செய்து படிக்கின்றனர். இப்படிப்பட்ட மாணவர்கள் பலரும் பல துறைகளில் சாதனையாளர்களாகத் திகழ்ந்துள்ளனர். ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் எந்த பாடப் பிரிவை தேர்வு செய்து படித்தாலும் சாதனை படைக்கலாம் என்பது கல்வியாளர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

தமிழில் நாட்டமில்லை

பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு ரேங்க் முறை நீக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பிளஸ் 2 தேர்வில் 1,200-க்கு 1,200 மதிப்பெண் பெற்றிருந்தாலும் மொழிப் பாடத்தில் சமஸ்கிருதம், தெலுங்கு, பிரெஞ்ச் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருந்தால் அவருக்கு முதல் ரேங்க் கிடைக்காது. ஆனால், தமிழை மொழிப் பாடமாக படித்து, ஒட்டுமொத்தமாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கே மாநில அளவில் முதல் ரேங்க் கிடைக்கும்.

தற்போது, ரேங்க் முறை நீக்கப்பட்டுள்ளதால், நடப்பாண்டு பிளஸ் 1 சேர்பவர்களில் மொழிப் பாடமாக தமிழை தேர்வு செய்வோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சமஸ்கிருதம், பிரெஞ்ச் ஆகிய மொழிப் பாடங்களை தேர்வு செய்வது 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x