Published : 28 Mar 2017 09:46 AM
Last Updated : 28 Mar 2017 09:46 AM

202 பத்திரப் பதிவுகள் மூலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விற்பனை: உயர் நீதிமன்றத்தில் பதிவுத் துறை ஐஜி தகவல்

இதுவரை 202 பத்திரப் பதிவுகள் மூலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என பத்திரப் பதிவுத்துறை அதிகாரி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள 66.70 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரூ.66 கோடிக்கு விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் லட்சுமணன், அழகிரி ஆகிய 2 பேருக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த 2 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி என்.கிருபாகரன், ‘சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது பறவைகளின் புகலிடமாகவும் விளங்கும் பள்ளிக்கரணை உள்ளிட்ட எந்தவொரு சதுப்பு நிலத்தையும் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யக்கூடாது. கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது’ என உத்தரவிட்டார். மேலும் கடந்த 1990 முதல் தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு செய்யப்பட்ட சதுப்பு நிலங்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திரப் பதிவுத் துறை ஐஜி தாக்கல் செய்த அறிக்கையில், ‘கடந்த 1990 முதல் தற்போது வரை 202 பத்திரப் பதிவுகள் மூலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விற்பனை செய்யப் பட்டுள்ள’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த 202 பத்திரப் பதிவுகளையும் செய்த சார் பதிவாளர்கள் யார், அவர்களில் எத்தனை பேர் தற்போது பணியில் உள்ளனர், எத்தனை பேர் ஓய்வு பெற்றுள்ளனர், சதுப்பு நிலத்தை பத்திரப் பதிவு செய்ததற்காக இந்த அதிகாரிகள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பதிவுத்துறை ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் பள்ளிக் கரனை சதுப்பு நிலம் ஆக்கிர மிக்கப்படுவதைத் தடுக்க வேலி அமைப்பது குறித்து வனம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், பத்திரப் பதிவு, குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 3 வாரத் துக்குள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். ஆக்கிரமிப் பாளர்களில் எத்தனைப் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்ற அறிக்கையையும் தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x