

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடலோர ஆந்திர பிரதேசம் முதல் தென் தமிழகம் வரையிலான வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது.
அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி வால்பாறையில் 7 செ.மீ., இரணியல், குழித்துறை, தக்கலை, குளச்சலில் தலா 4 செ.மீ., பாபநாசம், மயிலாடி, கன்னியாகுமரி, நாகர்கோவிலில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி, 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் எந்த நகரத்திலும் வெப்பம் பதிவாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.