Published : 15 Oct 2016 03:04 PM
Last Updated : 15 Oct 2016 03:04 PM

ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவுக்கு மேலும் 8 அணு உலைகள்: கூடங்குளம் 3, 4-வது அணு உலைகளுக்கு அடிக்கல் நாட்டிய மோடி தகவல்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமானத்துக்கு ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி ஆகியோர் கோவாவில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இன்று (சனிக்கிழமை) அடிக்கல் நாட்டினர்.

பின்னர் பேசிய மோடி, "ரஷ்யாவிடம் இருந்து மேலும் புதிதாக 8 அணு உலைகள் பெறுவதற்காக திட்டத்தை இந்தியா முன்வைக்கிறது. ஹைட்ரோகார்பன் துறையில் இந்திய பங்களிப்பு அதிகரிக்கப்படும்.

இந்தியா -ரஷ்யா இடையே சிறப்பான நட்புறவு நீடிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் துல்லிய தாக்குதல் உட்பட அனைத்து நடவடிக்கைக்கும் ரஷ்யா ஆதரவு அளித்துள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகின்றன” என்றார் மோடி.

கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது அணு உலையில் இருந்து கடந்த ஆண்டில் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இதேபோல் 2-வது அணு உலையிலும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.

இந்த வளாகத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள மேலும் 2 அணு உலைகள் அமைப்பதற்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியம் அனுமதி அளித்தது. இதையடுத்து இந்த அணு உலைகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமானத்துக்கு ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி ஆகியோர் கோவாவில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினர்.

ரூ.40 ஆயிரம் கோடி

கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலைகளை இந்திய அணுசக்தி கழகம் ரூ.39,747 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. இந்த 2 அணு உலைகளிலும் 2022-ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளத்தில் முதலாவது அணுஉலையில் இதுவரை 12,300 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு பணிகளுக்காக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி கடந்த மாதம் 7-ம் தேதி நிறுத்தப்பட்டது. அணு உலையின் அனைத்து அமைப்புகளின் செயல்திறனை ஆய்வு செய்த பின், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதலைப் பெற்று, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.14 மணிக்கு இந்த அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. உற்பத்தி தொடங்கிய 20 நிமிடங்களில் 90 மெகாவாட் வரையில் மின் உற்பத்தி செய்யப்பட்டதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x