

புஹாரி குழும நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னையை தலைமையிட மாக கொண்டு செயல்படும் புஹாரி குழுமம் கட்டுமானம், ரியல் எஸ்டேட், காப்பீடு(ஸ்டார் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ்), மின் உற்பத்தி இயந்திரங்கள் தயாரிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, கல்வி நிறுவனங்கள் நடத்துதல் உட்பட பல தொழில்களை செய்து வருகிறது.
புஹாரி குழுமமும், துபாயை தலைமையிடமாக கொண்ட இ.டி.ஏ குழுமமும் இணைந்து இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்களை செய்து வருகின் றன. பி.எஸ்.அப்துர் ரஹ்மானின் மகன்கள் ஆரிப், அப்துல் காதர், அகமத், அஸ்ரப் மற்றும் 2 மகள்கள், மருமகன்கள் இந்த தொழில்களை நிர்வகித்து வரு கின்றனர்.
புஹாரி குழும நிறுவனங்கள் முறையாக வருமான வரி செலுத்த வில்லை என்றும், நிலக்கரி இறக்குமதியில் பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் நிழற்சாலை 3-வது தெருவில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மானின் வீடு, அதே பகுதியில் 1-வது தெருவில் உள்ள மற்றொரு வீடு, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர், சாலிகிராமத்தில் ஹை பவர் என்ற பெயரில் உள்ள மின்சார இயங்திரங்கள் தயாரிக்கும் நிறுவன அலுவலகம், வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கிரசன்ட் பொறியியல் கல்லூரி, ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள புஹாரி டவர்ஸ், வேளச்சேரி சுலைகா கார்ஸ் உட்பட 17 இடங்களில் சோதனை நடந்தது. மேலும் மதுரை, தூத்துக்குடி, கீழக்கரை உட்பட தமிழகம் முழுவதும் புஹாரி குழுமத்துக்கு சொந்தமான 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிறுவனத்தின் அலுவலகங் கள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற இடங்களிலும் உள்ளன. அங்கேயும் நேற்று சோதனை நடத்தப்பட்டன. இந்தியா முழுவதும் மொத்தம் 76 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சோதனை நேற்றும் 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது.
இன்றும் சோதனை
கைப்பற்றப்பட்ட ஆவணங் களை வைத்து அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட ஆய்வில் பல கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3-வது நாளாக இன்றும் சோதனை நடத்தப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.