Published : 03 Jan 2014 09:40 AM
Last Updated : 03 Jan 2014 09:40 AM

கூட்டணி பற்றி பேச பாமக பொதுக்குழுவில் தடை!

தேசியக் கட்சியுடன் கூட்டணி வேண்டும் என்று பா.ம.க.வின் இளைஞர் அணித் தலைவரான அன்புமணியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு ஆகியோரின் கடுமையான நிர்பந்தங்களால் கூட்டணி பற்றி வியாழக்கிழமை நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பேசு வதற்கு நிர்வாகிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனால், கூட்டணி குறித்து முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமலேயே பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடந்த பல மாதங்களாக திராவிடக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பேசி வருகிறார்.

வன்னியர் சங்கத் தலைவரான காடுவெட்டி குரு உட்பட பெரும் பாலான முக்கிய நிர்வாகிகளும் கூட்டணி வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். குறிப் பாக, கிராமங்களில் சென்று வன்னியர் பிரமுகர்களையும் மக்களையும் சந்திக்கும் காடுவெட்டி குரு, சத்தியம் செய்யாத குறையாக தனித்து போட்டியிடுவோம் என்று சொல்லி ஆதரவு திரட்டி வருகிறார்.

ரகசிய ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் உள்பட சுமார் 30 பேர் வரை கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் உட்பட அன்புமணியின் ஆதரவாளர்கள் கூட்டணி தேவை என்பதை வலியுறுத்தினர். “உணர்ச்சிவசப்படாமல், அறிவுப்பூர்வமாக யோசித்து, யதார்த்தத்துடன் செயல்படுவோம். திராவிடக் கட்சிகள் போனால் போகட்டும்; தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் தவறு இல்லை; காங்கிரஸ் கட்சி ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட நிலையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கலாம்” என்று அவர்கள் ராமதாஸிடம் வலியுறுத்தினர்.

முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்

ஆனால், அந்தக் கூட்டத்தில் காடுவெட்டி குரு, “சமூக ஜனநாயகக் கூட்டணி தவிர்த்து வேறு எந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை கடுமையாக எதிர்க்கிறேன்.

அய்யா (ராமதாஸ்) என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப் படுகிறேன். ஆனால், தேமுதிக.வுடன் கூட்டணி என்பதில் மட்டும் யோசித்து செயல்படுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

தேமுதிகவை விமர்சிக்கவில்லை

இதற்கிடையே தேமுதிக, பாஜக, மதிமுக கூட்டணியில் பாமக-வையும் கொண்டுவரும் முயற்சிகள் நடந்து வருவதால் இப்போதைக்கு எதுவும் முடிவு எடுக்க வேண்டாம்; பொதுக் குழுவிலும் யாரும் கூட்டணி பற்றி பேச வேண்டாம். எதையும் அறிவிக்க வேண்டாம் என்று பாமக தலைமை முடிவு செய்துள்ளது.

அதேசமயம், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையவே கிடையாது. அவர்களை தாராள மாக விமர்சித்துப் பேசலாம். விஜயகாந்த் மற்றும் பாஜக குறித்து பொதுக்குழுவில்

எதுவும் விமர்சித்துப் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப் பட்டதாகக் கூறப்பட்டது.அதன்படியே கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பெரும்பாலும் திராவிடக் கட்சிகளை விமர்சித்து பேசினர்.

ஆனால், காடுவெட்டி குரு பேசும்போது, “மோடி அலை நாடெங்கும் வீசுவதாக சொல்கிறார்கள். இங்கு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x