

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையின் சதித் திட்டத்தை கண்டிக்கும் வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட 100 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஜெனீவாவில், வரும் 22-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 2009-ம் ஆண்டில், இலங்கையில் நடை பெற்ற போர் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, இலங்கை அரசு மேலும் 2 ஆண்டு காலம் அவகாசம் கேட்க உள்ளது.
ஏற்கெனவே, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து சர்வ தேச விசாரணை கோரி வந்ததை இலங்கை மறுத்துவரும் நிலையில், தற்போது உள்நாட்டு விசாரணையையும் தாமதப்படுத்து வதை கண்டித்து மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த.வெள்ளையன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது வைகோ பேசுகை யில், ‘‘ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மாநாட்டில், இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலையாகவோ இந்தியா செயல்படக்கூடாது. இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். இது உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக் கையாக இருக்கிறது’’ என்றார்.
இதைத் தொடர்ந்து, நுங்கம் பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.