ஓசூரில் அதிகரித்து வரும் காசநோய் பாதிப்பு

ஓசூரில் அதிகரித்து வரும் காசநோய் பாதிப்பு
Updated on
2 min read

காசநோயினால் பாதிக்கப்பட்டு ஓசூரில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற வருபவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் காசநோயை ஒழிப்பதற்காக காசநோய் மருத்துவ குழுவினர் மூலமாக முகாம்கள் மற்றும் தொடர் சிகிச்சைகள் வழங்கப் பட்டு வந்தாலும் காசநோய் அதிகரிப்பை கட்டுப்படுத்த இயலவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

தொழிற்சாலைகள் நிறைந்த ஓசூரில், காற்றில் மாசு அதிகரிப்பும், ஊட்டச்சத்து குறைவும் மற்றும் தீய பழக்க வழக்கமே காசநோய்க்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து ஓசூர் நகருக்கு வரும் இளைஞர்களிடையே பான்பராக் மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் இவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதில் காசநோயால் தாக்கப்படுகிறார்கள்.

மேலும் குடிசைப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களும் போதிய ஊட்டச்சத்துள்ள உணவு இன்றி காசநோயால் பாதிக்கப் படுகின்றனர். ஓசூர் அரசு மருத்துவ மனையில் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் காசநோய்க்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஓசூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு பொறுப்பாளர் மருத்துவர் மகேஷ் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், ஊத்தங்கரை, வேப்பனப் பள்ளி உட்பட 10 இடங்களில் காசநோய் தடுப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் ஓசூர் மையத்தில் காசநோய் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிரித்து வருகிறது. ஓசூர் வட்டத்தில் ராம்நகர், பார்வதிநகர், சானசந்திரம், மூக்கண்டப்பள்ளி, சின்னஎலசகிரி ஆகிய பகுதிகளில் காசநோய் பாதிப்பு காணப்படுகிறது. 2014-ம் ஆண்டு 218 பேரும், 2015-ம் ஆண்டு 210 பேரும், 2016-ம் ஆண்டு 236 பேரும் காசநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தற்போது இந்த ஆண்டில் (2017) ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை 60 பேரிடம் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஜுலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள 6 மாதங்களில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சிகிச்சைக்கு வருகிறார்கள். இதில் 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களே அதிகமாக உள்ளனர். காசநோயால் பாதிக்கப் பட்டு சிகிச்சைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஓசூர் அரசு மருத்துவமனையில் காசநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

காசநோய் பரம்பரை நோய் இல்லை. ஆனால் குடும்பத்தில் பெரியோர்களுக்கு காசநோய் இருந்தால் அது குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. இதனால் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடும்பத்தில் இருக்கும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு ஐ.என்.எச். என்ற நோய்த் தடுப்பு மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

காசநோயின் அறிகுறிகள்

இரண்டு வாரத்திற்கு மேல் தொடர்ந்து இருமல், மாலை நேரக்காய்ச்சல், இருமல் சமயத்தில் நெஞ்சுவலி, பசியின்மை, எடை குறைதல் ஆகியவை காசநோயின் அறிகுறிகளாகும். காசநோய் இருப்பதாக சந்தேகப்படும் நபரிடம் இரண்டு முறை சளி பரிசோதனை செய்தும், எக்ஸ்ரே எடுத்தும் நோய் இருப்பது உறுதிப்படுத்தப் படுகிறது. காசநோயால் பாதிக்கப் பட்டவர்கள் இருமும் போது வாயை துணியால் மூடிக்கொள்ள வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. இதனால் காசநோய் பரவாமல் தடுக்கலாம். காசநோய்க்கு ஊட்டச்சத்துள்ள பால், முட்டை, இறைச்சி மற்றும் பருப்பு, கீரை வகைகள் உள்ளிட்ட சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

காசநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 1992-ம் ஆண்டு முதல் டாட்ஸ் என்ற மாத்திரை வழங்கப் பட்டு வருகிறது. இலவசமாக வழங்கப்படும் இந்த மாத்திரையை 6 முதல் 8 மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு சிகிச்சை பெற்று வர வேண்டும். இந்த தொடர் சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களை அதன் பிறகும் 2 வருடங்கள் சுகாதாரப்பணியாளர்களால் கண்காணிக்கிறார்கள். மேலும் ஓசூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு சார்பில் மாதம்தோறும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் காசநோய் தடுப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in