

கூவத்தூரில் விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களிடம் விசாரணை மேற்கொள்ள சென்ற காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி முத்தரசியை, அமைச்சர்கள் கூட்டாக மிரட்டியதாக போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் அளித்த புகாரின் பேரில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உட்பட 4 பேர் மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கூவத்தூர் போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக, விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக, வருவாய்த் துறையினருடன் எஸ்பி முத்தரசி விடுதிக்கு சென்றார்.
அங்கு, புகார் குறித்து எம்எல்ஏக் களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது, அமைச்சர்கள், ‘சிலர் மீண்டும் அதிமுகவின் ஏதாவது ஒரு அணிதான் ஆட்சிக்கு வர உள்ளது. அப்போது, தங்களின் நிலை என்னவாகும் என நினைத்து பாருங்கள். தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க நேரிடும்’ என எஸ்பியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது, அருகில் இருந்த வடக்கு மண்டல ஐஜி செந்தா மரைக்கண்ணன் அமைச்சர்களிடம் பேசி சமாதானப்படுதியதாகவும், அதன்பிறகே எம்எல்ஏக்களிடம் எஸ்பி விசாரணை நடத்தியதாகவும் போலீஸ் வட்டாரங்களில் கூறப் படுகிறது.
கூவத்தூரில் ஏற்கெனவே காணப்படும் அரசியல் சூழலுக்கு மத்தியில் எஸ்பிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் இச்சம்பவத் தால் காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.