Published : 01 Mar 2016 03:56 PM
Last Updated : 01 Mar 2016 03:56 PM

மத்திய அரசை எதிர்த்து பேச அஞ்சுகிறாரா ஜெ.?- இளங்கோவன்

தனது சுயநலத்திற்காக தமிழ்நாட்டு நலனை தாரை வார்க்கிற அரசியலை செய்து வருகிறார் ஜெயலலிதா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு சென்னை மாநகரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழக அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் பெருமளவில் முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதால் ஆற்றங்கரையின் இருபுறத்திலும் வாழ்ந்து வந்த அப்பாவி மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, உடமைகள் இழக்கப்படுகிற அவலநிலை ஏற்பட்டது. இந்த கடும் மழையினால் மொத்தம் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழக்கிற பரிதாப நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து நிவாரண உதவிக்காக ரூ.28 ஆயிரம் கோடி தேவை என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். ஆனால், மத்திய அரசு வெள்ளப் பகுதிகளை பார்வையிட குழுவை அனுப்பி பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தது. அதற்குப் பிறகு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண உதவி வழங்கியது. இந்த நிதியை பெற்றுக் கொண்ட தமிழக அரசு 14 லட்சம் பேருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்கியது. அதற்குப் பிறகு மேற்கொண்டு நிதியை பெறுவதற்கு ஜெயலலிதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது தமிழக அரசு 14 லட்சம் பேருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கிய உதவித்தொகை மத்திய அரசின் பணமே தவிர, மாநில அரசின் பணம் அல்ல என்று பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார். எதற்கெடுத்தாலும் ஆட்சேபனை செய்து கடந்த காலத்தில் கடிதம் எழுதிய முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சரின் இந்த கூற்றுக்கு இதுவரை எந்த பதிலும் கூறாமல் மவுனம் சாதிப்பது ஏன் ?

நாடாளுமன்றத்தில் மக்களவையில் 38 உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களையும் ஆக, 49 உறுப்பினர்களை பெற்றிருக்கிற அதிமுக, மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க தயங்குவது ஏன் ? உச்ச நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு நடைபெறுகிற சூழலில் மத்திய அரசை எதிர்த்து பேச ஜெயலலிதா அஞ்சுகிறாரா? எப்படியாவது சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிற ஜெயலலிதா தமிழக நலன்களை சுயநலத்திற்காக தாரை வார்ப்பதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சமீபத்தில் நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கையில் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்திலே அதிமுக குரல் எழுப்பப் போகிறதா ? அல்லது சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவிப்பதுதான் எங்களது ஒரே நோக்கம் என்று கூறி நாடாளுமன்றத்தில் வாய்மூடி மௌனிகளாக அதிமுகவினர் இருக்கப் போகிறார்களா ?

தமது சுயநலத்திற்காக தமிழ்நாட்டு நலனை தாரை வார்க்கிற அரசியலை செய்து வருகிற ஜெயலலிதாவுக்கு விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்'' என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x