

இந்தியாவில் முதல்முறையாக படகுகள், தோணிகளைப் பராமரிக்க காற்று பைகள் மூலம் கடலில் இருந்து ஏற்றி இறக்கும் நவீன தொழில்நுட்பம் தூத்துக்குடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் மீன்பிடித் துறைமுகத் தையொட்டி, தனியார் படகு கட்டும் தளங்கள் சில உள்ளன. இவற்றில், பிரம்மாண்டமான விசைப்படகுகள் தயாரிக்கப்படுகின்றன. பராமரிப்பும் செய்யப்படுகிறது. பழுதாகும் படகு களைக் கடலில் இருந்து கரைக்கு ஏற்றவும், பழுது சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் கடலில் இறக்க வும், பாரம்பரிய முறை கடைபிடிக் கப்பட்டு வருகிறது. அதாவது, இரும்பு ரோலர்களை படகுகளுக்கு அடியில் போட்டு, பொக்லைன் மூலம் இழுத்து படகுகள் கரைக்கு கொண்டுவரப்படும். அதேபோல், ரோலர்களைக் கொண்டு பொக் லைன் மூலம் தள்ளிக் கடலுக்குள் இறக்கப்படும்.
படகுகளை இந்த முறையில் கரைக்கு ஏற்றவும், கடலுக்குள் இறக்கவும் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும். அத்துடன் படகுகள் அதிகம் சேதமாகும். ஆட்களும் அதிகம் தேவைப்படுவர். இந்த பழைய முறைக்கு மாற்றாக, காற் றுப் பைகள் மூலம் படகுகளைக் கையாளும் புதிய நவீன முறையை தூத்துக்குடியைச் சேர்ந்த படகு கட்டும் நிறுவன உரிமையாளர் ஆர்.அந்தோணியப்பா என்பவர் அறிமுகம் செய்துள்ளார். புதிதாக வடிவமைக்கப்பட்ட 70 டன் எடை யும், 100 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்ட விசைப்படகு இந்த நவீன காற்றுப் பைகள் மூலம் கடலில் இறக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தோணியப்பா கூறியதாவது: ‘‘இப்புதிய முறையில் படகுகளைக் கடலில் இறக்கவும், கரைக்கு ஏற்றவும் 5 பெரிய காற்றுப் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. படகுக்கு அடியில் இந்த காற்றுப் பைகளை வைத்து, படகு எடைக்கு தகுந்தாற்போல அதில் கம்ப்ரசர் மூலம் காற்று அடைக்கப்படுகிறது.
பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலம் படகு இழுக்கப்படுகிறது. படகு சற்று தொலைவுக்கு நகர்ந்த தும், பின்னால் வெளியே வரும் காற்றுப் பையை எடுத்து முன்னால் போட்டு காற்று நிரப்பப்படுகிறது. இவ்வாறு காற்றுப் பைகளை மாற்றி மாற்றி படகு நகர்த்தப்படுகிறது.
இந்த முறையில் படகுகளை ஒரே நாளில் ஏற்றி, இறக்கிவிடலாம். மேலும், படகுக்கு எந்த சேதமும் ஏற்படாது. பாதுகாப்பாக கையாள முடியும். பாரம்பரிய முறையில் படகை ஏற்றி, இறக்க கடல் பகுதி யில் குறிப்பிட்ட ஆழம் இருக்க வேண்டும். ஆனால், காற்றுப் பை முறையில் எந்த ஆழத்திலும் படகை கடலில் ஏற்றி, இறக்கலாம்.
நமது நாட்டில் தூத்துக்குடியில் தான் முதல்முறையாக இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த காற்றுப் பைகள் 8.5 மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் விட்டமும் கொண்டவை. ஒரு காற்றுப் பை 24 டன் எடையை தாங் கும். 4 காற்றுப் பைகளை வைத்து 150 டன் எடையுள்ள படகுகளை எளிதாகக் கையாளலாம்.
காற்றுப் பை முறையில் தோணி கள் மற்றும் சிறிய கப்பல்களையும் ஏற்றி இறக்க முடியும். தோணி களுக்கு தனியாக 7 பெரிய காற்றுப் பைகளை வாங்கியுள்ளோம். இவை 500 டன் எடையை தாங்கும் தன்மையுடையவை’’ என்றார்.
மங்களூரு செல்ல வேண்டாம்
தூத்துக்குடி தோணி உரிமை யாளர் சங்க செயலாளர் எஸ்.லசிங் டன் பர்னாண்டோ கூறும்போது, “தூத்துக்குடியில் 30 தோணிகள் உள்ளன. ஏற்கெனவே தோணி தொழில் நலிவடைந்து, தற்போது லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுக்கு மட்டும் சில சரக்குகளை ஏற்றிச் செல்கிறோம்.
தூத்துக்குடி பழைய துறைமுகத் தில் தோணிகளைப் பராமரிக்கும் ‘டிரை டாக்’ வசதி கிடையாது. மங்க ளூருக்குத்தான் செல்ல வேண்டும். அங்கு ஒரு நாளுக்கு ரூ.12 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டும். 10 நாட்களுக்கு சிறிய வேலை செய்ய வேண்டும் என்றாலும் ரூ.5 லட்சம் வரை செலவாகும். தற்போது, தூத் துக்குடியில் காற்றுப் பைகள் முறை அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. இதன்மூலம் செலவு மிகவும் குறையும். இந்த வசதி தோணி உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
புதிதாக தயாரிக்கப்பட்ட விசைப்படகை காற்றுப் பைகள் மூலம் கடலில் இறக்கும் பணி தூத்துக்குடியில் நடைபெற்றது.