

கடும் வறட்சியால் தட்டுப்பாடு நிலவும் நிலையில், திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதியில் வாசகர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பகல்நேர வெப்பநிலை 102 முதல் 104 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் பதிவாகி வருகிறது.
அணைகளிலும், குளங்களிலும் நீர் இருப்பு கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து குடிநீருக்காக குறைந்த அளவே தாமிரபரணியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆறு, ஓடைபோல் காட்சியளிக்கிறது.
பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் குழாய் உடைந்து தேங்கியுள்ள குடிநீர்.
குழாய்களில் உடைப்பு
தாமிரபரணியில் அமைக்கப் பட்டுள்ள உறைகிணறுகள் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீர், பல்வேறு நீரேற்று நிலையங்கள் மூலம் பம்பிங் செய்யப்பட்டு, திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குழாய்கள் வழியாக கொண்டு சேர்க்கப்படுகிறது. தண்ணீரை கொண்டு செல்வதற்காக புதைக்கப் பட்டுள்ள குழாய்கள் அவ்வப்போது உடைப்பெடுப்பதால் தண்ணீர் வீணாக வெளியேறுவது தொடர் கதையாகி வருகிறது.
தற்போது பற்றாக்குறை நிலவும் நிலையில் தண்ணீர் வீணாவது குறித்து பாளையங்கோட்டையை சேர்ந்த வாசகர் தனது வேதனையை பதிவு செய்துள்ளார். ‘‘பாளையங்கோட்டையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டரங்கத்தின் கிழக்கு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து பல வாரங்களாக தண்ணீர் வெளியேறி, தேங்கி நிற்கிறது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் இது குறித்து பல வாரங்களாகவே மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது. இப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வோர் குடிநீர் குழாய் உடைப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதேபோல், திருநெல்வேலி குறுக்குத்துறையிலிருந்து கருப்பந் துறைக்கு செல்லும் சாலையிலும் குழாய் உடைப்பால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் சாலையும் சேதமடைந்துள்ளது. குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கிடைக்கும் தண்ணீரை வீணாக்காமல் மக்களுக்கு பகிர்ந்தளிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து மாநகர மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.