

சம்பளமும் முழுமையாக வழங்கவில்லை என புகார்
எர்ணாவூர் கடலோரப் பகுதியில் படிந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றும், ஊதியம் ஒப்பந்ததாரருக்கு ஏற்ப முரண்பட்டிருப்பதாகவும் ஊழியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எண்ணூர் துறைமுகத்தில் 32 ஆயிரத்து 813 டன் அளவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற டான் காஞ்சிபுரம் கப்பல் விபத்துக்குள்ளானதை அடுத்து, கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்த கச்சா எண்ணெயில் உள்ள பெட்ரோல், டீசல் போன்ற பொருட்கள், சூரிய வெப்பத்தில் ஆவியாகிவிட்ட நிலையில், கச்சா எண்ணெயில் கடைசியாக மிஞ்சும் பொருளான தார்தான் தற்போது கடல் நீரில் மிதந்து வருவதாக கடலோர காவல் படையினர் தெரிவிக்கின்றனர். இவற்றை எடுக்க நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அவை எதுவும் பலன் அளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, வாளிகளைக் கொண்டு மனித ஆற்றல் மூலமாகவே எண்ணெய் படலம் அகற்றப்பட்டு வருகிறது.
வெளி மாநிலத் தொழிலாளர்கள்
இப்பணியில் பல்வேறு துறைகள் மூலமாக கடந்த 5 நாட்களில் 5 ஆயிரத்து 700 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள், அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோரை சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றன.
இந்த கச்சா எண்ணெயால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் வர வாய்ப்புள்ள நிலையில், உரிய பாதுகாப்பு வசதிகளை செய்யவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களுக்கு உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் உடை வழங்கப்படவில்லை. முழங்கை நீளத்துக்கும் கையுறை வழங்கப்படவில்லை. பூட்ஸ் மற்றும் சிறிய கையுறைகள் மட்டும் வழங்கப்படுகிறது. கடல் அலையின் வேகம் தற்போது அதிகமாக உள்ள நிலையில், கடலில் மிதக்கும் எண்ணெய் படலமானது, அதை அகற்றும் தொழிலாளர்கள் உடல் முழுவதும் விழுகிறது.
உணவு இடைவேளையின்போது, அவர்கள் கை, கால்களை கழுவுவதற்கு சோப்பு உள்ளிட்ட எதையும் சம்பந்தப் பட்ட அரசுத் துறைகள் வழங்குவ தில்லை. அப்பகுதியில் உள்ள கடல் மணலைக் கொண்டு கை மற்றும் கால்களில் படிந்துள்ள எண்ணெயை தொழிலாளர்கள் அகற்றி வருகின்றனர். சரியாக அகற்ற முடியாத நிலையில், அதே கையில் சாப்பிட்டும் வருகின்றனர்.
மேலும், இந்த தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு சில ஒப்பந்ததாரர்கள் தலா ரூ.700-ம், சில ஒப்பந்ததாரர்கள் ரூ.500-ம் வழங்கி வருகின்றனர். ஒரே பணிக்கு இவ்வாறு முரண்பட்ட சம்பளம் வழங்கப்படுவது தொடர்பாக தொழிலாளர்கள் சிலரிடம் கேட்டபோது, “பாதுகாப்பற்ற வேலையை செய்கிறோம். எங்கள் உழைப்புக்கான கூலி எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. தற்போது வேலை எதுவும் இல்லை. வயிற்றுப் பிழைப்புக்கு, கிடைத்த சம்பளத்தை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். இது தொடர்பாக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
பூட்ஸ் கழிவுகள்
தொழிலாளர்கள் பயன்படுத்தும் கையுறைகள் மற்றும் பூட்ஸ்களை, மீண்டும் பயன்படுத்த முடியாததால், கடற்கரையின் பல்வேறு பகுதியில் தொழிலாளர்கள் வீசி வருகின்றனர். இதனால் அந்த கடலோரப் பகுதியில் பூட்ஸ் மற்றும் கையுறை கழிவுகள் அதிகமாக உள்ளது.
ஆட்சியர் விளக்கம்
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியிடம் கேட்டபோது, “ஊதியம் குறைவாக கொடுக்கப்படுவது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கை மற்றும் கால்களை கழுவுவதற்கு திரவ சோப்பு வழங்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஊதியம் குறைவாக கொடுக்கப்படுவது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கை மற்றும் கால்களை கழுவுவதற்கு திரவ சோப்பு வழங்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்