Published : 01 Jun 2016 05:22 PM
Last Updated : 01 Jun 2016 05:22 PM

டாஸ்மாக் கடைகளை பகல் 12 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

டாஸ்மாக் கடைகளை மதியம் 12 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் சென்னை தாயகத்தில் இன்று நடந்தது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன் உள்ளிடோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தமிழகத்தில் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணி மாற்று அரசியலை முன்னெடுத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது. ஆனால், இரு துருவ அரசியலை விரும்பும் திமுகவும், அதிமுகவும் ஊழலின் மூலம் சம்பாதித்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைத்து வாக்குகளை பெற்றுள்ளன. எனினும், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி – தமாகா அணி சுமார் 26 லட்சத்து 18 ஆயிரத்து 250 வாக்குகளுடன் 6.4% வாக்குகளை பெற்றுள்ளது.

தேர்தலின் போது பெரியளவில் பணப்பட்டுவாடா நடந்தது. இது தொடர்பாக வைகோ புகார் அளித்திருந்தார். ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகியவை இணைந்து செயல்படும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளிடம் விவசாயிகள் பெற்ற கடனையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். மருத்துவப் படிப்புக்கு அடுத்த ஆண்டும் நுழைவுத் தேர்வு கூடாது.

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மதியம் 12 முதல் மாலை 5 மணி என்று நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். பெட்ரோல். டீசல் , சேவை வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்'' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x