Published : 13 Jan 2014 08:31 AM
Last Updated : 13 Jan 2014 08:31 AM

இலங்கை போர்க் குற்றம்: நேரில் கண்டவர்களிடம் விவரம் கேட்டார் அமெரிக்க அதிகாரி

இலங்கையின் போர்க்குற்றம் பற்றி விசாரிக்க அரசு, அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகளை சந்தித்து விவரம் அறிவது, போர் நடந்த பகுதிகளுக்கு செல்வது என்ற திட்டத்துடன் அமெரிக்க தூதர் ஸ்டீபன் ஜே. ராப் (உலக கிரிமினல் நீதி அலுவலகம்) இலங்கையில் ஜனவரி 6 முதல் 11ம் தேதி வரை பயணம் மேற்கொண்டார்.

‘போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி கேட்டறிந்த அவர், நல்லிணக்கம், நீதி, மனித உரிமை மீறலுக்கு அரசு பொறுப்பு ஏற்கவேண்டும் போன்றவற்றில் இலங்கை மக்கள் ஆவலுடன் இருப்பதை தெரிந்துகொண்டார்.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பாக, அவற்றை நேரில் பார்த்த சாட்சிகள் சொன்னவற்றை கவனமாக கேட்ட ராப், மனித உரிமை மீறல் பற்றியும் விசாரித்து அறிந்தார்.

போர்க்குற்றம் பற்றி சுதந்திரமான, நம்பகமான விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மைகளை கண்டறிந்து, தேவைப்பட்டால் வழக்கு தொடுக்க வேண்டும் என இலங்கையை அமெரிக்கா வலியுறுத்துகிறது.

இலங்கையின் அனைத்து மக்களும் நிம்மதியாகவும் வளமாகவும் வாழ உறுதுணை புரிய அமெரிக்கா தயாராக இருக்கிறது. நடந்த சம்பவங்கள் விஷயத்தில் தீர்வு கண்டு அனைத்துத் தரப்பினரும் இணக்க நிலைக்கு வருவதும் சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக ஆட்சியின் கோட்பாடுகளுக்கும் மதிப்பு தரக்கூடிய ஒன்றுபட்ட நாடாக முன்னேறிச் செல்வதும் முக்கியம்’ என்று தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

2009ல் நடந்த போரின்போது ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் ஏராளமானோர் கொல்லப்பட்ட இடங்கள் என விவரித்து அதற்கான புகைப்படங்களை ராப் பயணத்தின்போது கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டது. இந்த புகாரை இலங்கை மறுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x