Published : 21 Feb 2016 02:00 PM
Last Updated : 21 Feb 2016 02:00 PM

தேமுதிக, பாமக, புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் ராஜினாமா: எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தார் விஜயகாந்த்

தேமுதிக, பாமக, புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், தங்கள் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். பேரவையில் தேமுதிகவின் பலம் 20 ஆக குறைந்ததால் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த் இழந்தார்.

கடந்த 2011 சட்டப்பேரவை தேர் தலில் அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேமுதிக 41 தொகுதிகளில் போட்டி யிட்டு 29 இடங்களை வென்றது. இதன்மூலம் அதிக உறுப்பினர் களைக் கொண்ட 2-வது பெரிய கட்சி என்பதால் தேமுதிகவுக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

புதிய அரசு அமைந்த சிறிது காலத்திலேயே பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் அதிமுக அரசை விஜயகாந்த் விமர்சித்துப் பேசினார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அவருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக - தேமுதிக கூட்டணி முறிந்தது.

இந்நிலையில், 2013-ம் ஆண்டு மதுரை மத்தியத் தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தரராஜன், திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் ஆகி யோர் தங்கள் கட்சியின் தலை மைக்கு தெரிவிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். தொகுதி பிரச்சினைக்காக முதல்வரை சந்தித்துப் பேசியதாக கூறிய அவர்கள், விஜயகாந்தையும் கடுமையாக விமர்சித்தனர். முதல்வரை சந்தித்துப் பேசிய நாள் முதல் அவர்கள் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்களாக கருதப்பட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து தேமுதிக உறுப்பினர்கள் பேராவூரணி அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், சேந்தமங்கலம் சாந்தி, செங்கம் சுரேஷ்குமார், விருதுநகர் மாஃபா பாண்டியராஜன், திருத்தணி அருண் சுப்ரமணியம் ஆகியோரும் அடுத்தடுத்து முதல்வரைச் சந்தித்துப் பேசினார். இதனால் சட்டப்பேரவையில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்களின் எண் ணிக்கை 8 ஆக உயர்ந்தது. அவர் கள் தனி அணியாகவே செயல்பட்டு வந்தனர். பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவையும் அதிமுக அரசையும் ஆதரித்துப் பேசினர்.

இதற்கிடையே, தேமுதிக அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அக்கட்சி யில் இருந்து விலகினார். இதனால், தனது ஆலந்தூர் தொகுதி எல்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் அதிமுகவில் இணைந்துவிட்டார். இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்களையும் சேர்த்து சட்டப்பேரவையில் தேமுதிக பலம் 28 ஆக குறைந்தது.

பாமகவைச் சேர்ந்த அணைக் கட்டு தொகுதி எம்எல்ஏ கலைஅரசு, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி எம்எல்ஏ ராமசாமி ஆகியோரும் தங்கள் கட்சித் தலைமைக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தனர்.

தற்போது இந்த ஆட்சி முடிந்து, சட்டப்பேரவைக்கு விரைவில் தேர் தல் நடைபெற உள்ளது. இதனால், தேமுதிக அதிருப்தி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்து சீட் பெற முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக, பாமக, புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும் நேற்று காலை பேரவைத் தலைவர் ப.தனபாலை அவரது அலுவலகத்தில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமா லுதீன் நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மு.அருண் சுப்பிரமணியன் (திருத்தணி), செ.அருண் பாண்டியன் (பேராவூரணி), ஆர்.சாந்தி (சேந்தமங்கலம்), ஆர்.சுந்தர்ராஜன் (மதுரை மத்தியம்), டி.சுரேஷ்குமார் (செங்கம்), க.தமிழழகன் (திட்டக்குடி), க.பாண்டியராஜன் (விருதுநகர்), மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), ம.கலைஅரசு (அணைக்கட்டு), ஆ.ராமசாமி (நிலக்கோட்டை) ஆகிய 10 பேரும் தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து பிப்ரவரி 21-ம் தேதி முதல் விலகியுள்ளனர். அவர்களின் பதவி விலகல்களை பேரவைத் தலைவர் அதே தேதியில் இருந்து ஏற்றுக்கொண்டுள்ளார்.

அந்தஸ்தை இழந்த விஜயகாந்த்

தேமுதிக உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் அக்கட்சியின் பலம் 28-ல் இருந்து 20 ஆக குறைந்தது. இதன்காரணமாக, எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த் இழந்தார்.

இதுகுறித்து பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

‘தேமுதிக கட்சியைச் சேர்ந்த 8 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தேமுதிக உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளதால் சட்டப்பேரவை விதி 2(ஓ)-ன்படி, எதிர்க்கட்சித் தலைவராக, பேரவைத் தலைவரால் அங்கீகரிப்பதற்குரிய தகுதியை விஜயகாந்த் இழக்கிறார். இதன் காரணமாக, அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தையும், சலுகைகளையும் இழக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவையில் குறைந்தபட்சம் 24 உறுப்பினர் களைக் கொண்ட எந்தக் கட்சியும் இல்லாததால் எதிர்க்கட்சித் தலை வர் என்று வேறு எந்த சட்டப்பேரவை கட்சித் தலைவரையும் அங்கீகரிக்க இயலாது என்றும் பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x