Published : 13 Jul 2016 08:47 AM
Last Updated : 13 Jul 2016 08:47 AM

சீமாங்க் மையங்கள் மூலம் 5 ஆண்டுகளில் 15 லட்சம் பெண்களுக்கு சிகிச்சை: தமிழக அரசு தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள 126 சீமாங்க் மையங்கள் மூலம் 5 ஆண்டுகளில் 15 லட்சம் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2005-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவால் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் (சீமாங்க்) தொடங்கப் பட்டன. இவை கடந்த 5 ஆண்டு களாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற் போது 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உட்பட 126 சீமாங்க் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை பரிந்துரை மருத்துவமனைகளாக செயல் படுவதால் பிரசவ காலத்தில் தாய்மார்களுக்கும், சிசுக்களுக்கும் சிறப்பான சேவையை 24 மணி நேரமும் வழங்கி வருகின்றன.

சீமாங்க் மையங்களுக்கென பிரத்யேகமாக 508 சிறப்பு மருத்துவர்கள், 582 செவிலியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக ரூ. 226 கோடியே 50 லட்சத்தில் மகப்பேறு பிரிவு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தாய், சேய் நலன்களுக்காக வென்டிலேட்டர், வார்மர் உள்ளிட்ட அதி நவீன கருவிகள் ரூ. 59 கோடியே 63 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளன. சீமாங்க் மையங்களில் உள்ள அறுவை அரங்குகளுக்கு உலகத் தரம் வாய்ந்த ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளன.

1,416 மருத்துவர்கள், 3 ஆயிரத்து 9 செவிலியர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தாய்மார்களின் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. கர்ப்பிணிகள் சீமாங்க் மையங்களைப் பயன்படுத்துவது கடந்த 3 ஆண்டுகளில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

சீமாங்க் மையங்கள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 15 லட்சம் தாய்மார்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. பிரசவத்துக்காக பெண்களை இம்மையத்துக்கு அழைத்து வருவதில் 108 ஆம்புலன்ஸுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. பிரசவத்தின்போது உறவினர் ஒருவர் உடனிருக்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டதன் மூலம் மகப்பேறு மருத்துவத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் மிக குறைவாக உள்ளது. இதற்கு சீமாங்க் மையங்களே காரணம்.

இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x