

எம்.எல்.ஏ-யை தொடர்பு கொண்டு உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிவியுங்கள் என்று அரவிந்த்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து தொடர்ச்சியாக தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி. எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து, "எம்.எல்.ஏக்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும். தங்கள் தொகுதி மக்களுடன் பேசி யாருக்கு வாக்களிப்பது (சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு) என முடிவெடுக்க வேண்டும். யாருக்கு வாக்களிக்கவேண்டும் என நான் சொல்லவில்லை.
அந்தந்த தொகுதி மக்கள் யார் வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் நியாயமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அரவிந்த்சாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களை சந்திக்க சசிகலா போயிருக்கும் சூழலில், "நினைவுபடுத்துகிறேன். உங்கள் எம்.எல்.ஏ-யை தொடர்பு கொண்டு உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிவியுங்கள். அவர்கள் உங்களுக்காக பணியாற்றுபவர்.
ஆகவே அவர் ஏதோ உங்களுக்கு சாதகம் செய்கிறார் என்பது போல் அவர் உங்களை நடத்த அனுமதிக்காதீர்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.