

சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனின் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி வேந்தர் மூவீஸ் மதன் ரூ.84.24 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பல மாதங்களாக தலைமறைவாக இருந்த மதனை போலீஸார் கைது செய்தனர். இதில் ஹவாலா மூலம் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி அமலாக்கத் துறையினர் மதனை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, சென்னை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி அருள்முருகன் முன்பு நேற்று நடந்தது. அப்போது மதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ், ‘‘இந்த வழக்கில் மதன் மீது எந்த தவறும் இல்லை. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மதனே சிறையில் இருந்தவாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். போலீஸ் விசாரணைக்கு மதன் முழு ஒத்துழைப்பு அளிப்பார். எல்லா வகையிலும் உத்தரவாதம் அளிக்கவும் தயாராக உள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ரூ.84 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. அந்தப் பணம் எங்கு சென்றது என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது. இந்த வழக்கில் 133 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே மதனை ஜாமீனில் விடக்கூடாது’’ என்று ஆட்சேபம் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீது ஜூன் 9-ம் தேதி (இன்று) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.