

மருத்துவப் பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சென்னை, திருச்சி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்பிபிஎஸ் முடித்துவிட்டு கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, பட்ட மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தமிழக அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தர விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவர்கள், அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
‘பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண் டும்’ என்ற கோரிக்கை வலியுறுத் தப்பட்டது. திருச்சி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தர்ணா நடத்தப்பட்டது. இப்போராட் டத்தில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சங்கத்தின் அமைப் புச் செயலாளர் ஏ.ராமலிங்கம் சென்னையில் நேற்று கூறியதாவது:
அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் பழைய முறைப்படி 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினோம். 10, 20, 30 சதவீதம் என மதிப்பெண் வழங்கி கலந்தாய்வு நடத்தினர். நடந்து முடிந்த பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் மட்டுமே பயன் பெற்றனர். அவர்களுக்கு மட்டும் தான் இடம் கிடைத்தது. அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை கள், மாவட்ட தலைமை மருத்துவ மனைகள், தாலுகா மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத் துவர்களுக்கு இடம் கிடைக்க வில்லை. அரசு இனியும் தாமதிக்கா மல் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திண்டுக்கல் லில் 18-ம் தேதி (இன்று) நடக்கிறது. எங்கள் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.