

மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கையில், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு ஓரளவு நீதி வழங்குவதற்கான அரசின் இந்த நடவடிக்கையை பாமக வரவேற்கிறது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை உருவானதிலிருந்தே இத்தகைய ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வந்தது. நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முழுமையாக சரி செய்ய முடியாது என்றாலும், இத்தகைய இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியை ஓரளவாவது பாதுகாக்க முடியும்.
அதேநேரத்தில் சமூக நீதிக்கு எதிரான சக்திகளால் இந்த நடவடிக்கையை சகித்துக் கொள்ள முடியாது. உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ அணுகி இத்தகைய இட ஒதுக்கீட்டுக்கு தடை பெறத் துடிப்பார்கள். அதற்கு இடம் கொடுத்துவிடாத வகையில் போதிய சட்டப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக விழிப்புடன் செயல்பட வேண்டும்.
மாறாக, நீட் பாதிப்பை போக்க ஏதோ நடவடிக்கை எடுத்தோம் என்று காட்டிக் கொள்வதற்காக பெயரளவில் இப்படி ஓர் அரசாணையை பிறப்பித்து விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால் தமிழக அரசின் துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.