

வாழ்க்கையில் சிறந்த சேவை அன்னதானமே என்பதை கருத்தில் கொண்டு, கடந்த 17 ஆண்டுகளாக அமாவாசை நாட்களில் அன்னதானம் வழங்கி வருகிறார் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை 108 சிவாலயம் அருகே வசிப்பவர் என்.லெனின்(63). இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வள்ளலாரின் ஆன்மிக மார்க்கத்தில் பற்றுகொண்ட இவர், வாழ்க்கையின் சிறந்த சேவை அன்னதானம்தான் என்பதை உணர்ந்து, தன்னால் முடிந்தளவுக்கு அன்னதானத்தை வழங்குவதென முடிவு செய்தார்.
அதன்படி, அமாவாசைதோறும் 150 பேருக்கு சாம்பார், ரசம், மோர், இரண்டு வகை கூட்டு என வாழை இலையில் தன்னுடைய வீட்டில் அன்னதானம் வழங்கி வருகிறார். தன்னுடைய வீட்டின் வாசலில், அமாவாசைதோறும் அன்னதானம் என்ற அறிவிப்புப் பலகையை வைத்துள்ளார். அதில், அடுத்து அன்னதானம் வழங்கப் படும் தேதியைக் குறித்துவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து லெனின் கூறியபோது, “காவல் துறையில் பணியாற்றும்போதே வள்ளலாரின் மீது பற்றுகொண்டிருந்தேன். அவரது மார்க்கத்தின்படி செயல்பட முடிவுசெய்தேன். பசித்தவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ இப்பிறவியில் நாம் செய்த பாவங்களை நம்முடைய வாழ்நாட் களிலேயே போக்கிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அமாவாசைதோறும் அன்னதானம் வழங்கி வருகிறேன்.
தங்களின் மூதாதையருக்காக அமாவாசை நாளில் விரதமிருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள முதியவர்கள் பலர், விரதத்தை முடித்துவிட்டு சாப்பிடுவதற்குக் கூட வழியின்றி சிரமப்படுவதை அறிந்தவன் என்பதால் அமாவாசையன்று அன்ன தானம் வழங்குவதென முடிவு செய்தேன். முதியவர்களுடன், ஏழை மக்களும், ஒரு நேரம் நல்ல உணவு சாப்பிடக் கூட வழியில்லாதவர்களும் என் வீட்டுக்கு வந்து உணவருந்திச் செல்வது என் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
மாதந்தோறும் அமாவாசை நாளில் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை அன்னதானம் செய்துவருகிறேன். உணவு தயாரிப்பில் 5 பேர் ஈடுபடுகிறோம். இந்த சேவைக்கு என் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். கடந்த 17 ஆண்டுகளாக நான் அன்னதானம் வழங்கி வருகிறேன்.
ஒரு நாள் அன்னதானத் துக்கு ரூ.4 ஆயிரம் செலவாகிறது. நான் அன்னதானம் வழங்குவது குறித்து கேள்விப்பட்டு நிதியுதவி செய்ய முன்வருவதும் உண்டு. அவ்வாறு யாரா வது நிதியுதவி செய்தால் அதைப் பெற்றுக்கொண்டு அன்னதானம் வழங்குவேன். இல்லையென்றால், என்னுடைய சொந்தப் பணத்தில் அன்ன தானம் வழங்கி வருகிறேன் என்றார்.
லெனின்